இலங்கை
தங்கம் கடத்திய நடிகை ரன்யா ராவ்வுக்கு சிறை

தங்கம் கடத்திய நடிகை ரன்யா ராவ்வுக்கு சிறை
கன்னட நடிகை ரன்யா ராவ்வுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கன்னட நடிகையான ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், 14 கிலோ தங்கத்தைத் தனது உடலில் மறைத்துக் கடத்தி வந்த குற்றச்சாட்டிலே குறித்த நடிகை கைது செய்யப்பட்டார்.
இதை அடுத்து அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் கணக்கில் வராத 2.67 கோடி ரூபாய் பணமும் , 2.06 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன.
இதேவேளை, தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரன்யா ராவ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், ரன்யா ராவுக்கு சொந்தமான 34 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை அந்நாட்டு அமுலாக்கத்துறை முடக்கியுள்ளது.
குறித்த தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த ஓராண்டு சிறைத் தண்டனை காலத்தில் ரன்யா ராவுக்கு பிணை வழங்கக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.