இலங்கை
தையிட்டி விகாரை மீது விரைவில் சட்டநடவடிக்கை!

தையிட்டி விகாரை மீது விரைவில் சட்டநடவடிக்கை!
காங்கேசன்துறை- தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பதென வலிகாமம் வடக்கு பிரதேசசபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த விகாரைமீது சட்ட நடவடிக்கை எடுப்பதென வலி.வடக்கு பிரதேசசபையால் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டிருந்தது. இதனையடுத்து சட்ட நடவடிக்கை தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகளுக்காக பிரதேசசபைஉறுப்பினர்கள் தையிட்டி விகாரைக்கு நேரில் சென்று நிலைமைகளை அவதானித்தனர். அப்போதே விகாரைக்கு அருகேயுள்ள காணியொன்றில் புதிய கட்டுமானம் ஒன்றை அமைப்பதற்கான குழியொன்று வெட்டப்பட்டிருப்பதை அவர்கள் அவதானித்தனர்.
எனினும் விகாரையில் புதிய கட்டுமானம் அமைப்பதற்கான எந்தவொரு அனுமதிக்கோரிக்கையும் விகாராதிபதியால், வலி. வடக்கு பிரதேசசபையிடம் கையளிக்கப்பட்டிருக்கவில்லை. எனவே இந்தப்புதிய குழி தொடர்பிலும் விகாராதிபதியிடம் பிரதேசசபை விளக்கம் கோரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.