இலங்கை
காவுவாங்கும் வல்லைப்பாலம்; தவிசாளர் நிரோஷ் சுட்டிக்காட்டு

காவுவாங்கும் வல்லைப்பாலம்; தவிசாளர் நிரோஷ் சுட்டிக்காட்டு
வல்லைப்பாலம் பழுதடைந்து பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கின்றது. எனவே, இதற்கு என்ன தீர்வு? என்று வலிகாமம் கிழக்கு பிரதேசசபைத் தவிசாளர் தியாகராசா நிரோஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
வலிகாமம் கிழக்கின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் வல்லைப் பாலம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. ஆறுக்கும் மேற்பட்ட உயிர்கள் அண்மைக்காலத்தில் பறிபோயுள்ளன. அத்துடன், காயங்களை ஏற்படுத்திய, வாகனங்கள் சேதமடைந்து பல விபத்துகளும் அண்மையில் இடம்பெற்றுள்ளன. வல்லைப் பாலம் மேலும்மேலும் ஆபத்தானதாக மாறிவரும் நிலையில், அதைச் சீரமைப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்-என்றார்.
இதற்குப் பதில் வழங்கிய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்ததலைவரும் அமைச்சருமான சந்திரசேகரன், வல்லைப் பாலம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் அதற்குரிய நிதி ஒதுக்கப்படும் என்றார். இதையடுத்து, வல்லைப் பாலத்தில் போதியளவு மின்விளக்குகள் இல்லை என்ற விடயத்தை இளங்குமரன் எம்.பி. சுட்டிக்காட்டினார். இதற்குப் பதில் வழங்கிய தவிசாளர், ‘கடந்த காலங்களில் வல்லைப் பாலத்தில் போதியளவு மின் விளக்குகள் பூட்டப்பட்டன. எனினும், அவை காலப்போக்கில் திருடப்பட்டுவிட்டன. உடனடித் தேவை கருதி சில சோலர் விளக்குகளைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.