இலங்கை
அமைச்சரும், மாவட்டச்செயலரும் விகாராதிபதியுடன் இரகசியச் சந்திப்பு!

அமைச்சரும், மாவட்டச்செயலரும் விகாராதிபதியுடன் இரகசியச் சந்திப்பு!
தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் தீர்வொன்றை எட்டும் வகையில் விகாராதிபதியுடன் திடீர் இரகசியச் சந்திப்பொன்றை கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரும், யாழ்.மாவட்டச் செயலர் பிரதீபனும் நேற்று மேற்கொண்டுள்ளனர்.
குறித்த விகாரைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதென வலி.வடக்கு பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், இந்தச் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றுள்ளது.
இதற்கு முன்னரும் விகாராதிபதியை கடற்றொழில் அமைச்சர், சந்தித்துப் பேச்சுகளை நடத்தியிருந்தார் என்றும். நேற்று அதன் தொடர்ச்சியாகவே இரண்டாம் கட்டப் பேச்சுகள் இடம்பெற்றன என்றும் தெரியவருகின்றது.
இந்தச் சந்திப்பு நடந்துகொண்டிருந்த போது, சட்டநடவடிக்கைக்கான பூர்வாங்கப் பணிகளுக்காக வலி. வடக்குப் பிரதேசசபை உறுப்பினர்கள் விகாரைப் பகுதிக்குச் சென்றிருந்தனர். அவர்கள் மூலமே இந்த இரகசியச் சந்திப்பு விடயம் ‘சந்திக்கு’ வந்தது. எனினும் இந்தப் பேச்சுகளின் போது பரிமாறப்பட்ட விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.