பொழுதுபோக்கு
உனக்கு பிடிக்குதோ, இல்லையோ என்னோட தான் வாழனும்; எனக்கு ஆண் துணை வேணும்: ரிஹானா ஓபன் டாக்!

உனக்கு பிடிக்குதோ, இல்லையோ என்னோட தான் வாழனும்; எனக்கு ஆண் துணை வேணும்: ரிஹானா ஓபன் டாக்!
தற்போதைய சூழலில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை ரிஹானா மற்றும் அவரது கணவர் இடையே ஏற்பட்ட பிரச்சனை பேசுபொருளாகி இருக்கிறது. ஒருவர் மீது மற்றொருவர் சரமாரி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இந்நிலையில், தனது கணவரிடமிருந்து பல துன்புறுத்தல்களை எதிர் கொண்டதாக நடிகை ரிஹானா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் பல்வேறு விஷயங்களை அவர் விரிவாக பேசியுள்ளார்.அதன்படி, “கொரோனா தொற்றின் போது என்னுடைய தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது, அவரை தூக்கிக் கொண்டு செல்ல என்னால் முடியவில்லை. அந்த சூழலில் தான் எனக்கு ஆண் துணை தேவைப்பட்டது. இதேபோல், எனது மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது மருத்துவமனையில் அனுமதித்தேன். அப்போது, என் மகளுடன் இருந்து பார்த்துக் கொள்வதற்கு ஒரு ஆண் துணை இருந்திருக்கலாமே என்று யோசித்தேன்.அந்த சூழலில் கூட என் கணவர் ஒரு விருந்தினர் போன்று எனது மகளை பார்த்து விட்டுச் சென்றார். என்னுடைய அனுமதி இல்லாமல் தான், அவர் எனக்கு தாலி கட்டினார். இது தொடர்பான ஆதாரங்களை போலீசாரிடம் கொடுத்திருக்கிறேன். போதை பொருள் விற்பனையில் எனது கணவருக்கு தொடர்பு இருக்கிறது. அவரது வீட்டில் இந்த போதை பொருள்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு நபரிடம் நான் சிக்கி இருக்கிறேன். என்னுடைய பணம் மற்றும் நகை அவரிடம் இருக்கிறது. அவற்றை மீட்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, அவருடன் நான் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், உடல் ரீதியாக என்னை துன்புறுத்தியதால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனக்கு விருப்பம் இருந்தாலும், இல்லையென்றாலும் தன்னுடன் தான் வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்.எப்படியாவது என் கணவரிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அதன் பின்னர், பிரச்சனையை பொறுத்துக் கொள்ள முடியாமல், மகளிர் போலீசாரிடம் புகாரளித்தேன். ஒரு பாதுகாப்புக்காக ஆண் துணை வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இப்படி ஒரு நபருடன் வாழ முடியாது” என்று நடிகை ரிஹானா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் புயலை ஏற்படுத்தி இருக்கிறது.