இலங்கை
காணிகளை சூரையாடும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக விமர்சனம்!

காணிகளை சூரையாடும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக விமர்சனம்!
முத்துநகர் மக்களின் விவசாய காணிகளில் பல வருடங்களாக விவசாய பயிர்செய்கை செய்துள்ளனர், ஆனால் தற்போது இந்த அரசாங்கம் காணிகளை சூரையாடும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்து நகர் பகுதியில் சுமார் 800 ஏக்கர் விவசாய காணிகளை தனியார் கம்பனிகளுக்கு சோளர் திட்டத்துக்கு வழங்கியுள்ள நிலையில் குறித்த பகுதிக்கு விஜயம் செய்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், குறிப்பாக சென்ற ஜனாதிபதி தேர்தலில் பகிரங்கமாக மேடைகளில் சொன்ன விடயம் தான் முத்து நகர் மக்களை எழுப்பப் போவது கிடையாது, அந்த மக்கள் நிம்மதியாக பயிர் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என கூறி விட்டு ஆட்சியமைத்ததன் பின் தற்போது பழி வாங்கப்பட்டு நீதிமன்ற வழக்குகளுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.
தற்போது மக்களை இந்த அரசாங்கம் ஏமாற்றியுள்ளது. 1972ம் ஆண்டு முதல் இந்த மக்கள் இங்கு விவசாயம் செய்து குடியிருந்து வருகின்றார்கள். ஆனால் எந்தவிதியும் இன்றி வெளியேறச் சொன்னால் எங்கே போவார்கள் என அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.
இந்த அரசாங்கம் தான் சொன்னார்கள் சென்ற காலங்களில் மக்களை இனி வீதியில் இறக்கமாட்டோம் ஆர்ப்பாட்டம் செய்ய நாட்டில் இடமளியோம் மக்களுக்கான அரசாங்கம் என கூறி வேறு வெளிநாட்டு கம்பனிகளினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் (IMF) கோரிக்கைகளுக்குள் மாட்டி தத்தளித்து மக்களை துன்புறுத்துகின்றனர்.
இவ்வாறான சூழலில் கருணை செய்து மக்களது காணிகளை வழங்க அரசாங்கமும், ஜனாதிபதியும் இவ்விடயத்தில் செயற்பட வேண்டும் என்பதே கோரிக்கையாக காணப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.