பொழுதுபோக்கு
சும்மா போட்ட கண்ணாடி; இப்போ அதுவே அடையாளம் ஆகிடுச்சு; நாதஸ்வரம் சீரியல் நடிகை ஃபேமஸ் ஆனது இப்படித்தான்!

சும்மா போட்ட கண்ணாடி; இப்போ அதுவே அடையாளம் ஆகிடுச்சு; நாதஸ்வரம் சீரியல் நடிகை ஃபேமஸ் ஆனது இப்படித்தான்!
சினிமாவை போலவே சீரியல்களுக்கும் பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. குறிப்பாக, 2000-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் 90ஸ் கிட்ஸ்களுக்கு இன்று வரை ஃபேவரட்டாக உள்ளன. இப்போது, சமூக ஊடகங்களில் இந்த சீரியல்களின் வீடியோக்கள் அதன் ரசிகர்களால் ஷேர் செய்யப்படுகின்றன.இந்த பட்டியலில், ‘நாதஸ்வரம்’ சீரியலுக்கு முக்கிய இடம் இருக்கிறது. திருமுருகன் இயக்கத்தில், யதார்த்த கதைக்களத்தில் அமைந்த இந்த சீரியல் மக்கள் அபிமானம் பெற்றது. இதில் நடிகை கீதாஞ்சலியின் பாத்திரத்தை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. தனது அறிமுக சீரியலிலேயே முதிர்ச்சியான நடிப்பை வழங்கியவர் என்று பாராட்டுகளை பெற்றார். இந்நிலையில், டெலி விகடன் யூடியூப் சேனலுக்கு நடிகை கீதாஞ்சலி நேர்காணல் அளித்தார். அதில், சீரியல் வாய்ப்பு தனக்கு கிடைத்த அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.அதில், “இயக்குநர் திருமுருகன் எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந்தார். சிறுவயதில் இருந்தே அவரது குடும்பத்தினரை நன்றாக தெரியும். ஒரு முறை அவரிடம், எனக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு தருமாறு என்னுடைய அத்தை விளையாட்டாக கூறினார். அவரும், என்னுடைய புகைப்படங்களை அவரது அலுவலகத்திற்கு அனுப்ப சொன்னார்.அப்போது, நான் 12-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அவர் கூறியதும் புகைப்படங்களை அவரது அலுவலகத்திற்கு அனுப்பினேன். அதன் பின்னர், ஆடிஷனில் கலந்து கொண்டு ‘கஜினி’ திரைப்படத்தின் காட்சியையும், ‘காதல்’ திரைப்படத்தின் காட்சியையும் நடித்து காண்பித்தேன். இவை இயக்குநர் திருமுருகனுக்கு பிடித்திருந்தால், எனக்கு ‘நாதஸ்வரம்’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதற்கு ஏற்றார் போல், கல்லூரி படிப்பையும் சீரமைத்துக் கொண்டேன்.’பருத்திவீரன்’ திரைப்படத்தில் பிரியாமணி கதாபாத்திரம் போன்று, சீரியலில் எனது பாத்திரத்தை வடிவமைத்திருந்ததாக திருமுருகன் கூறினார். சீரியலில் நடிக்க என் வீட்டாரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். நான் எப்போதுமே கண்ணாடி அணிந்திருப்பேன். முதல் நாள் படப்பிடிப்பின் போது நிறைய லைட்டுகள் வைத்திருந்தனர். அப்போது, கண்ணாடி அணிந்து கொண்டால் சௌகரியமாக இருக்கும் என்று தோன்றியது.இதனை இயக்குநர் திருமுருகனிடம் கூறினேன். அவரும் தாராளமாக கண்ணாடி அணிந்து கொள்ளலாம் என்று கூறினார். யதார்த்தமாக கண்ணாடி அணிந்து நடித்ததே, பின்னர் எனக்கு அடையாளமாக மாறியது” என்று நடிகை கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.