பொழுதுபோக்கு
விதவையா இருக்கலாமே, எதுக்கு 2-வது கல்யாணம்? பெண்கள் தான் அதிகம் கேட்டாங்க: மாஸ்டர் செஃப் கவிதா வேதனை!

விதவையா இருக்கலாமே, எதுக்கு 2-வது கல்யாணம்? பெண்கள் தான் அதிகம் கேட்டாங்க: மாஸ்டர் செஃப் கவிதா வேதனை!
சமூகத்தின் ஒவ்வொரு நிலையில் இருக்கும் பெண்களும் நிச்சயம் ஏதோ ஒரு பிரச்சனையை எதிர் கொண்டு வாழ்கின்றனர். எனினும், அந்தப் பிரச்சனைகளை தாண்டி சாதனை படைத்த பெண்கள், மற்றவர்களுக்கு உந்து சக்தியாக இருக்கின்றனர். அந்த வகையில், தனது வாழ்வில் ஏற்பட்ட சிரமங்கள், துயரங்கள் அனைத்தையும் கடந்து, தாம் முன்னேறிய பயணம் குறித்து மாஸ்டர் செஃப் கவிதா தெரிவித்துள்ளார். டெலி விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலின் போது, இது குறித்து அவர் பகிர்ந்து கொண்டார்.அந்த வகையில், “மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அது எவ்வளவு பெரிய வாய்ப்பு என்று தெரியவில்லை. ஆனால், அதற்கு பின்னர் மாஸ்டர் செஃப் குறித்து பலரும் கூறும் போது தான், அதன் பிரம்மாண்டம் என்னவென்று புரிந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு வரை, வாழ்க்கை மிகவும் சோகமானதாக இருந்தது. ஆனால், தற்போது ஓரளவிற்கு சீரமைத்துள்ளேன்.வித்தியாசமான பல உணவு வகைகள் செய்வதற்கான திட்டம் இருந்தது. எனினும், பொருளாதார நெருக்கடியில் அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கான வாய்ப்பு மாஸ்டர் செஃப் மூலம் அமைந்தது. அதனால், மாஸ்டர் செஃப் எனக்கு மிகவும் பிடித்தமான அனுபவமாக அமைந்தது. மீண்டும் ஒரு முறை மாஸ்டர் செஃப் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்கிறேன்.உடல் பருமனாக இருக்கும் காரணத்தினால், எனது கணவர் என்னை ஒதுக்கி வைத்தார். அந்த வாழ்க்கையில் இருந்து வெளியேறினால், என்னால் எதுவும் செய்ய முடியாது என்று பலர் கூறினார்கள். ஆனால், சமூக ஊடகம் மற்றும் மாஸ்டர் செஃப் உதவியுடன் ஒரு நிலையை நான் அடைந்தேன். என்னைப் போன்று பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், முதல் கணவர் இறந்த பின்னர் விதவையாக வாழ வேண்டியது தானே; எதற்காக இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள வேண்டும்? என்று பலர் கேள்வி எழுப்பினர். இத்தகைய கேள்விகளை பெரும்பாலான பெண்களே என்னிடம் கேட்டனர். நான் தனியாக இருக்கும் காரணத்தினால் வாடகைக்கு வீடு கொடுக்க பல பெண்கள் யோசித்தனர். மசாலா பொருட்கள் விற்பனை செய்து எப்படி வீட்டு வாடகை கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர்.சுமார் 28 வயதிலேயே எனது முதல் கணவர் உயிரிழந்து விட்டார். அதன் பின்னர், 34 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். அவரும் நான் உடல் பருமனாக இருக்கிறேன் என்பதை காரணம் காண்பித்து பிரிந்து விட்டார்” என்று மாஸ்டர் செஃப் கவிதா தெரிவித்துள்ளார்.