இலங்கை
கிளிநொச்சியில் நடைபெற்ற பிரபல வீரர் அமரர். அகஸ்ரின் ஞாபகார்த்த சைக்கிளோட்டப் போட்டி

கிளிநொச்சியில் நடைபெற்ற பிரபல வீரர் அமரர். அகஸ்ரின் ஞாபகார்த்த சைக்கிளோட்டப் போட்டி
கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேச பிரபல சைக்கிளோட்ட வீரர் அமரர். அகஸ்ரின் ஞாபகார்த்த வருடாந்த மாபெரும் சைக்கிளோட்டப் போட்டி இன்று(19.07.2025) சனிக்கிழமை சிறப்புற நடைபெற்றது.
வடமாகாண / கிளிநொச்சி மாவட்ட மட்டத்திலான மாபெரும் சைக்கிளோட்டப் போட்டியாக நான்கு பிரிவுகளாக நடைபெற்றன.
இதன்படி ஆண்களுக்கான 60 மைல் சைக்கிளோட்டம்(வடமாகாண மட்டம்), 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான 25 மைல் சைக்கிளோட்டம்(வடமாகாண மட்டம்), பெண்களுக்கான 15 மைல் சைக்கிளோட்டம் (வடமாகாண மட்டம்), கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான சைக்கிளோட்டப்போட்டி (வீரர்கள் 12 மைல் – வீராங்கனைகள் 8 மைல்) ஆகிய பிரிவுகளாக நடைபெற்றன.
நிகழ்வின் இறுதியாக கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
குறித்த நிகழ்வு சிரேஷ்ட வெளிநாட்டு சேவை உத்தியோகத்தரும், சைக்கிளோட்டப் போட்டி விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அகஸ்ரின் கிறிஸ்ரிரூபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும், சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கு பெறுமதியான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த மாபெரும் சைக்கிளோட்டப் போட்டி இம்முறை மூன்றாவது தடவையாக கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர், கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியாசலை பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரின் இணைப்பாளர், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு பிரிவு உத்தியோகத்தர்கள், அதிபர்கள், சைக்கிளோட்ட வீர வீராங்கனைகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை