இலங்கை
மீனவரின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு தீயில் கருகியது!

மீனவரின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு தீயில் கருகியது!
மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன் பிடி படகு மற்றும் வெளி இணைப்பு இயந்திரம் ஆகியவை கடலில் வைத்து எரியூட்டப்பட்டுள்ளது.
விடத்தல் தீவு கடற்கரையில் கடந்த சில தினங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட மீன்பிடி படகின் வெளி இணைப்பு இயந்திரம் இனம் தெரியாத நபர்களினால் இரவு நேரங்களில் கடலில் தூக்கி வீசப்பட்டு வந்த நிலையில், குறித்த வெளி இணைப்பு இயந்திரங்கள் மீட்டு மீனவர்கள் கடல் தொழிலுக்குச் சென்று வந்துள்ளனர்.
இந்த நிலையில் விடத்தல் தீவு மேற்கு மீனவ கூட்டுறவு சங்கத்தின் பொருளாளர் கடந்த வெள்ளிக்கிழமை மீன் பிடிக்க கடலுக்குச் சென்று மீண்டும் படகு விடத்தல் தீவு கடற்கரையில் கட்டப்பட்டது.
குறித்த படகில் பெறுமதியான வெளி இணைப்பு இயந்திரமும் பொருத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை (19) காலை மீண்டும் தொழிலுக்குச் செல்ல குறித்த படகின் உரிமையாளர் கடற்கரைக்குச் சென்ற போது படகை காணவில்லை.
இதன் போது குறித்த படகு மற்றும் வெளி இணைப்பு இயந்திரம் ஆகியவை சற்று தொலைவில் எரியூட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் அடம்பன் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
பின்னர் தடயவியல் நிபுனத்துவ பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று எரியூட்டப்பட்ட படகு மற்றும் வெளி இணைப்பு இயந்திரம் ஆகியவற்றை பார்வையிட்டதோடு, விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.