இந்தியா
புதுச்சேரி சுற்றுலாத்துறை: காலி இடங்களை மாநில இளைஞர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் – சி.ஐ.டி.யு கோரிக்கை

புதுச்சேரி சுற்றுலாத்துறை: காலி இடங்களை மாநில இளைஞர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் – சி.ஐ.டி.யு கோரிக்கை
புதுச்சேரி சுற்றுலாத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை புதுச்சேரி இளைஞர்களை கொண்டு நிரப்பப்பட வேண்டும். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என சி.ஐ.டி.யு மாநில தலைவர் நா.பிரபுராஜ் புதுவை அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.சி.ஐ.டி.யு புதுச்சேரி மாநில தலைவர் நா.பிரபுராஜ் பேசியதாவது:சுற்றுலா நகரமாக மட்டுமே காட்சிப்படுத்தப்படும் புதுச்சேரி, சுற்றுலாவை மேம்படுத்துவதே புதுச்சேரி அரசின் இலக்காக வைக்கப்பட்ட போதும் அந்தத் துறை எந்த நிலையில் உள்ளது. சுற்றுலாவையொட்டி குடியிருப்பு, பள்ளி- கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் இருக்கும் பகுதிகளிலும் கூட பல்வேறு தளர்வுளை ஏற்படுத்தி தனியார் ரெஸ்டோ பார்கள், கார்ப்பரேட் ரிசார்டுகள், இரவு கேளிக்கை விடுதிகள், கடற்கரைப் பகுதிகள் முழுவதும் தனியார் கேளிக்கை விடுதிகள் என புதுச்சேரி கடற்கரை முதல் கடைகோடி கிராமங்கள் வரை சுற்றுலாவின் அடையாளமாக தற்போது காட்சிப்படுத்தப்படுகிறது.புதுச்சேரி அரசிற்கு கிடைக்கப்படும் வருவாய் என்பது போதுமானதா? இதை வைத்து மட்டுமே புதுச்சேரி அரசை நடத்த முடியுமா? புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தளங்களை வலுப்படுத்துவதன் மூலமே ஒட்டுமொத்த வருவாயும் அரசு கஜனாவிற்கு வந்து சேரும். அதற்கு முதல் அடித்தளமாக புதுச்சேரி சுற்றுலாத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை புதுச்சேரி இளைஞர்களை கொண்டு நிரப்பப்பட வேண்டும். அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சட்டப்படியாக 7வது ஊதிய குழு அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக புதுச்சேரியில் அரசின் சார்பில் கடற்கரையோரம் கட்டப்பட்ட கட்டிடங்கள் சுற்றுலா தளங்கள் மொத்தமாக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.வம்பா கீரபாளையத்தில் செயல்பட்டு வரும் பாண்டி மெரினா கட்டிடங்கள் அனைத்தும் சுற்றுலாத்துறை சார்பில் கட்டப்பட்டவையே. ஆனால், புதுச்சேரி சுற்றுலாத்துறையால் பராமரிக்க முடியாது என்ற பெயரில் ஒரு சில வேண்டிய தனிநபர்களுக்கு சில லட்சங்கள் மட்டும் ஆண்டிற்கு சுற்றுலாத்துறைக்கு பெற்றுக் கொண்டு, தனி நபர்கள் பல மடங்கு பயன்பெறுவது எந்த வகையில் சுற்றுலா துறையை மேம்படுத்த உதவும். புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இயக்கப்படும் படகு குழாம்களை பிரத்யேகமாக மேம்படுத்தினால் அதன் வருவாயை சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும். ஆனால், அதையும் தனியாருக்கு பங்கு போட்டு கொடுத்துவிட்டு வருவாயில் தனக்குத்தானே பற்றாக்குறையை ஏற்படுத்திக் கொள்ளும் துறையாக புதுச்சேரி சுற்றுலாத்துறை உள்ளது. அதற்கு ஒரு உதாரணம் சுண்ணாம்பாறு படகு குழாம். ஊசுட்டேரி படகு குழாம் புதுச்சேரி வனத்துறை சார்பில் பூட்டு போடப்பட்டுள்ளது. அதற்கு பல்வேறு விதமான காரணங்கள் கூறினாலும் புதுச்சேரி சுற்றுலாத்துறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி படகு குழாம் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல்வேறு சுற்றுலாவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர். அந்தப் படகுக்குழாமை இயக்குவதற்கு புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக உயர்வு தொடர்ந்து போராடி வந்தாலும் அண்ணாதுரை அதிகாரிகள் கனத்த மவுனம் காத்து வருகின்றனர். இப்படி சுற்றுலா என்ற ஒற்றை இலக்காக கொண்டு பயணிக்கும் புதுச்சேரி அரசு அதன் துறையை சீர்படுத்தாமல் சுற்றுலா வளர்ச்சி என்பது கானல் நீராகவே மறைந்து போகும். எனவே புதுச்சேரியை பொருளாதார சுமைகளிலிருந்து மீட்டெடுக்க சுற்றுலாவும் தேவை . சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி இருந்தது? பஞ்சாலைகளும், சர்க்கரை ஆலைகளும் , சிறு குறு தொழிற்சாலைகளும், அரசு கூட்டுறவு நிறுவனங்களும் துளிர்விட்டு மலர்ந்த காலமாய் இருந்தது. வேலைவாய்ப்பு புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல , புதுச்சேரியோடு ஒட்டி இருக்கக்கூடிய தமிழக பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் பெண்கள் என தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக புதுச்சேரி காட்சியளித்தது. புதுச்சேரி கடைவீதிகளும் வியாபார தலங்களும் மாத துவக்கத்தில் ஒன்றாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மக்கள் தலைகள் நிறைந்த வியாபார ஸ்தலங்களாக காட்சியளித்தது. தற்போது ஏற்பட்டிருக்கும் வியாபார மந்தம், சமூக குற்றங்கள் அதிகரிப்பு ,கடன் சுமை நிறைந்த குடும்பங்கள், தற்கொலை அதிகம் நடக்கும் மாநிலம், இளம் விதவைகள் அதிகரிக்கும் மாநிலம், வயது முதிர்ந்தவர்கள் முதல் இளம் பருவ மாணவர்கள் வரை அதிகரிக்கும் போதை கலாச்சாரம் பல்வேறு அவப்பெயர்களோடு தற்போது புதுச்சேரி காட்சியளிப்பது வேதனை மிகுந்த வலியாகும்.அரசு கூட்டுறவு நிறுவனங்கள், சர்க்கரை ஆலைகள், பஞ்சாலைகள், சிறு குறு தொழில்கள் அனைத்து வகையான பொருளாதார அடித்தளங்களையும் கடந்த 25 ஆண்டுகளில், புதுச்சேரி அரசின் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளால் சத்தமில்லாமல் கைவிட்டதன் விளைவு, இன்றைய புதுச்சேரியின் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வோடு கைகோர்த்தால் மட்டுமே அனைத்து பொருளாதார பிரச்சனைகளையும் சரி செய்ய முடியும் என்று மக்களிடத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு என்.ஆர் காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி வாக்கு சேகரித்தனரோ, அதற்கு நேர் மாறாக கையில் இருந்த பொருளாதாரத்தை இழந்து பரிதவிக்கின்ற பரிதாப நிலையை புதுச்சேரி அரசு அடைந்துவிட்டது.கண்களைக் கட்டி காட்டில் விட்டது போலவும், செல்லும் திசை அறியாமல் வழி தவறிய பறவையாய் காற்றடிக்கும் திசையில் பறந்து கொண்டிருக்கிறது புதுச்சேரி. ஒருபுறம், துணைநிலை ஆளுநர் நடத்தும் ‘அதிகாரமிக்க அரசு’. மறுப்புறம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘அதிகாரமற்ற அரசு’. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலந்த ஆலோசிக்காமல் மத்தியில் ஆட்சியாளர் கட்சிக்கே மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் ( சட்டமன்றத்தில் வாக்களிக்க கூடிய அதிகாரத்தோடு) என்பது புதுச்சேரி மக்களின் ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. அதனை முதன் முதலில் புதுச்சேரியில் தொடங்கி வைத்தது பா.ஜ.க-வின் ஜனநாயக விரோத அரசியல். அதுவும் சட்டமன்றத்தில் கல்வியாளர்கள் பொருளாதார அறிஞர்கள், புதுச்சேரி அரசை வழி நடத்த திறம்பட விளங்கும் அறிஞர்கள் என்று அவர்களுக்காக உருவாக்கப்பட்ட நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி என்பது தற்போது மத்தியில் ஆளும் அரசியல் கட்சிக்கு தேர்தல் வேலை செய்பவர்களுக்கு வழங்கப்படுவது எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த பதவிகளை மாண்புகள் சீர்குலைக்கப்பட்டுள்ளது.தன்னால், எதுவும் செய்ய இயலவில்லை என்ற விரக்தியில் புதுச்சேரி முதலமைச்சர் ‘தற்காலிக’ கோபம் அடைந்தாலும் ஒரு சில நாட்களிலேயே ,சர்வ சாதாரணமாக மத்திய அரசு தலையிட்டு சரி செய்யப்படுவது ஆச்சரியமாகவே உள்ளது.பிரச்னைகளும் தீர்ந்த பாடு இல்லை. புதுச்சேரி அரசியல் தலங்களும் மக்களுக்காக பணியாற்றுவர்களை புறந்தள்ளிய அரசியலாக மாற்றப்பட்டதும், இந்த அவல நிலையின் முக்கிய காரணமாகும். ஒரு வரியில் சொல்லப்போனால், கோடீஸ்வரர்களின் கைகளில் புதுச்சேரி சட்டமன்றம் சிக்கிக்கொண்டது. கட்சி அரசியல் பின்னுக்குப் போய் மிகப்பெரும் பணக்காரர்கள், தனி நபர்கள், எந்த கட்சியில் எப்போது சேர்ந்தாலும், எந்த கட்சிக்கு எப்போது தாவினாலும் அல்லது சுயேட்சையாக நின்றாலும் கொள்கையற்ற பண அரசியல் மட்டுமே தற்போது கோலோச்சுவதால், மக்களின் தேவைகள் சட்டமன்றத்தில் எதிரொளிப்பதில்லை. குறிப்பாக புதுச்சேரி மக்கள் தொகையில் பெரும்பகுதியாக இருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நீண்ட கால கோரிக்கைகள் கூட சட்டமன்றத்தில் எதிரொலிக்கப்படவில்லை. அமைப்புசாரா தொழிலாளர்கள் வாழ்க்கையில் பொருளாதார மேம்பாடு ஏற்பட்டால் புதுச்சேரியின் பெரும் பகுதி மக்களுக்கான பொருளாதார மேம்பாடாக அமையும் என்பதே பொருளாதார வல்லுனர்களின் ஆணித்தரமான கருத்து.ஆண்டுக்கு சில மணி நேரம் நடக்கும் நாடக ஒத்திகை போல், சட்டமன்ற கூட்டத்தொடர்கள் நடைபெறுகின்றதே தவிர மக்கள் கோரிக்கைகளை எதிரொளிப்பதாக அது அமையவில்லை. அதே சமயத்தில், சிறு குறு தொழிற்சாலைகள், பஞ்சாலைகள், ஐடி பார்க் உள்ளிட்டவைகளும் உருவாக்கினால் மட்டுமே புதுச்சேரிக்கு எதிர்காலம் உண்டு.” என்று கூறினார்.