இலங்கை
மூளாயில் இரு குழுக்கள் வெறிகொண்டு மோதல்! கட்டுப்படுத்த பொலிஸ் துப்பாக்கிச் சூடு

மூளாயில் இரு குழுக்கள் வெறிகொண்டு மோதல்! கட்டுப்படுத்த பொலிஸ் துப்பாக்கிச் சூடு
வட்டுக்கோட்டை, மூளாய் பிரதேசத்தில் நேற்று இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருந்த நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்தப் பொலிஸார் எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், மூவரைக் கைது செய்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரு நபர்களுக்கு இடையே மோதல் சம்பவம் நடந்த நிலையில், இந்தப் பிரச்சினை பொலிஸ் நிலையம் வரை சென்றிருந்தது. இந்தப் பிரச்சினையின் தொடர்ச்சியாக நேற்று இரு நபர்களின் ஊரவர்கள் இணைந்து ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டுள்ளனர். இதன்போது ஒரு மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரிக்கப்பட்டதுடன், இன்னொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொருக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற வட்டுக்கோட்டைப் பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சித்த போது, பொலிஸார் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதையடுத்து பொலிஸார் எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு நடத்தி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து மூளாயில் நேற்று பொலிஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.