இந்தியா
மகாராஷ்டிர தேர்தல் முடிவு : காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம்… எதற்காக தெரியுமா?

மகாராஷ்டிர தேர்தல் முடிவு : காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம்… எதற்காக தெரியுமா?
மகாராஷ்டிர மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் பாஜக மட்டும் 132 இடங்களில் வெற்றிபெற்றது. அந்த கூட்டணி மொத்தமாக 235 தொகுதிகளை கைப்பற்றியது. அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 20, காங்கிரஸ் 16 மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றன.
இதையடுத்து, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் முரண்பாடு இருப்பதாகவும், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியிருந்தது. அதில், வாக்குபதிவு நாளில் கடைசி ஒரு மணி நேரத்தில் 76 லட்சம் வாக்குகள் பதிவானதை நம்ப முடியவில்லை என்றும் பல்வேறு தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளை மறுத்து தேர்தல் ஆணையம் பதில் கடிதம் எழுதியுள்ளது. அதில், மகாராஷ்டிர மாநிலத் தேர்தல் வெளிப்படையான முறையில் நடந்துள்ளதாகக் கூறியுள்ளது. எனினும் காங்கிரஸின் புகார்கள் குறித்து விவாதிக்க வரும் 3 ஆம் தேதி பிரதிநிதிகளை அனுப்பி வைக்கப்படும்படியும், அப்போது காங்கிரஸின் நியாயமான குறைகள் அனைத்தும் விவாதிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.