இலங்கை
மடகஸ்காரில் கைதான 8 இலங்கை கடற்றொழிலாளர்களும் விளக்கமறியலில்

மடகஸ்காரில் கைதான 8 இலங்கை கடற்றொழிலாளர்களும் விளக்கமறியலில்
மடகஸ்கார் கடற்பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட, இலங்கை கடற்றொழிலாளர்கள் எட்டு பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
‘ரூட் பபா 6’ என்ற நெடு நாள் மீன்பிடி படகு, கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி 8 கடற்றொழிலாளர்களுடன் வென்னப்புவ பகுதியிலிருந்து ஆழ்கடலுக்குப் புறப்பட்டது.
இந்த நிலையில் கடல் எல்லைகளை மீறிய குற்றச்சாட்டில் அவர்கள் கடந்த மாதம் 2 ஆம் திகதி மடகஸ்கார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட சரியான வசதிகள் வழங்கப்படாமல் குறித்த கடற்றொழிலாளர்கள் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில் அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
தற்போது மடகஸ்காரில் சிறையில் உள்ள 8 இலங்கை கடற்றொழிலாளர்களையும் விடுவிக்க, சீஷெல்ஸில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட இலங்கையர்கள் தொடர்பாக மடகஸ்கார் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் வழக்கு, பிரெஞ்சு மற்றும் சிங்கள மொழிகளில் தேர்ச்சி பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் இன்மையால், அடுத்த மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.