பொழுதுபோக்கு
உடல் முழுவதும் காயம்; கண்ணாடியை தொடையில் வைத்து தையல் போட்ட டாக்டர்; தளபதி தினேஷ் மெமரீஸ்!

உடல் முழுவதும் காயம்; கண்ணாடியை தொடையில் வைத்து தையல் போட்ட டாக்டர்; தளபதி தினேஷ் மெமரீஸ்!
தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் முன்னணி சண்டை பயிற்சியாளராக பணியாற்றும் ‘தளபதி’ தினேஷ், தனது சினிமா அனுபவங்கள் குறித்து சினி உலகம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதன் சுவாரஸ்ய தொகுப்பை இந்தப் பதிவில் பார்க்கலாம்.அதன்படி, “என் உடலில் இதுவரை 30 முதல் 40 தையல்கள் போடப்பட்டுள்ளன. ‘புதிய ஸ்வரங்கள்’ என்ற திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது, உடற்பயிற்சி கூடத்தில் ஒரு சண்டைக் காட்சியை படமாக்கினோம். அப்போது, உண்மையான கண்ணாடி என் தொடையில் குத்திவிட்டது.உடனடியாக மருத்துவமனைக்கு சென்று முதலுதவி செய்து தையல் போடப்பட்டது. ஆனால், அதன் பின்னரும் கண்ணாடி குத்திய இடத்தில் வலி தொடர்ச்சியாக இருந்தது. காயம் இன்னும் சரியாகாமல் இருப்பதால் அந்த இடத்தில் வலி இருக்கிறது என்று நினைத்தேன். எனினும், வலி அதிகரித்த காரணத்தால் எக்ஸ்ரே எடுத்து பார்த்தேன்.அப்போது தான், சில கண்ணாடி துண்டுளையும் அப்படியே வைத்து தையல் போடப்பட்டுள்ளது என தெரிய வந்தது. அதற்கடுத்து, அறுவை சிகிச்சை செய்து அந்த கண்ணாடி துண்டுகளை அகற்றினார்கள். இப்படி பல சம்பவங்கள் நிகழ்ந்த போதும் கூட, இந்த துறையில் பணியாற்றியதை நினைத்து வருத்தப்பட்டது கிடையாது.ஏனெனில், இந்த துறையின் மூலமாக தான் பணம், நற்பெயர், புகழ் என அனைத்தும் எனக்கு கிடைத்தது. முக்கியமாக, இதில் இருந்து கிடைக்கும் புகழ் தான் எங்களுக்கு பெரிதாக தெரியும். அதனால், ரிஸ்க் குறித்து கவலைப்பட்டது கிடையாது. மோகன்லால் திரைப்படத்திலும், ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘தளபதி’ திரைப்படத்திலும் அதிக ரிஸ்க் எடுத்து நடித்தேன்.’தளபதி’ படத்தின் ஒரு காட்சியில் சுமார் 40 அடி உயரத்தில் இருந்து ஒரே ஷாட்டில் கீழே விழ வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது, காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாகனத்தை தயாராக வைத்திருந்தார்கள். ஆனால், அந்த ஸ்டண்டை சரியாக செய்து முடித்ததால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.சினிமாவை பொறுத்தவரை ஒரு நபர் கடினமாக உழைப்பது தெரிந்தால், அவருக்கான மதிப்பு கிடைத்து விடும். அந்த வகையில் தான் ‘ப்ளட் ஸ்டோன்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில், ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்தார். இவ்வாறு நாம் சரியாக உழைத்தால் சினிமாவில் முன்னேறலாம்” என சண்டை பயிற்சியாளர் தளபதி தினேஷ் தெரிவித்துள்ளார்.