பொழுதுபோக்கு
33 வருஷமா பாம்புகளுக்கு மத்தியில் வாழ்க்கை; இன்று 33 கோடியில் சொந்த வீடு; பிகில் பட வில்லன் சுவாரஸ்ய பின்னணி!

33 வருஷமா பாம்புகளுக்கு மத்தியில் வாழ்க்கை; இன்று 33 கோடியில் சொந்த வீடு; பிகில் பட வில்லன் சுவாரஸ்ய பின்னணி!
புகழ்பெற்ற சினிமா பிரபலங்கள் என்றதும் அவர்களின் வாழ்க்கை கோடிகளில் இருக்கும் என்று சாமானியர்கள் நினைக்கின்றனர். இதில் உண்மை இருக்கிறது என்றாலும், பலர் தங்கள் வாழ்க்கையை தொடங்கியது வறுமை நிலையாக இருக்கும். அதிலும், சினிமா பின்னணி இல்லாத பலர் மிக எளிமையான வாழ்க்கையில் இருந்து, அதன் பின்னர் தங்களின் கடின முயற்சியால் உயரிய அந்தஸ்தை அடைந்துள்ளனர்.இதற்கு பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃபை உதாரணமாக கூறலாம். பெரும்பாலான தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை ‘பிகில்’ திரைப்படத்தின் வில்லனாக தெரியும். ஆனால், பாலிவுட்டில் இவர் முன்னணி நடிகராக விளங்குகிறார். தற்போது, பான் இந்தியன் நடிகராகவும் இவர் வலம் வருகிறார். ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கும் இவர், 13 மொழிகளில் சுமார் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததாக கூறப்படுகிறது.இன்றைய சூழலில் கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக ஜாக்கி ஷெராஃப் அறியப்படுகிறார். ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பாக, மும்பையில் ஒரு அறை மட்டுமே இருக்கும் சிறிய வீட்டில் இருந்து தனது பயணத்தை ஜாக்கி ஷெராஃப் தொடங்கினார். அந்த வீட்டில் ஒரு முறை பாம்பை பார்த்ததாகவும், ஒரு எலி தன்னையும், தனது தாயாரையும் கடித்ததாகவும் ஜாக்கி ஷெராஃப் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இதனால், அந்த வறுமை நிலையில் இருந்து மீண்டு வர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எழுந்துள்ளது.தனது 11-ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய ஜாக்கி ஷெராஃப் பல்வேறு வேலைகளை செய்துள்ளார். இதன் பின்னர், அவருக்கு ‘சுவாமி தாதா’ என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு அடுத்த ஆண்டு அவர் நடித்த ‘ஹீரோ’ என்ற திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. இதன் மூலம் பாலிவுட் நட்சத்திரமாக ஜாக்கி ஷெராஃப் உருவெடுத்துள்ளார்.இதன் பின்னர், இவர் நடித்த பல திரைப்படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாகி உள்ளன. கோடிகளில் சம்பளம் வாங்கிய ஜாக்கி ஷெராஃப், தான் சிறுவயதில் வசித்த வீட்டை வாங்குவதற்கு முயற்சி செய்தார். ஆனால், வீட்டின் உரிமையாளர் அதனை விற்க மறுத்துவிட்டார். எனினும், தற்போது மும்பையில், கடலோர பகுதியில் ஆடம்பரமான அடுக்குமாடிக் குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் ஜாக்கி ஷெராஃப் வசிக்கிறார். இந்த வீட்டின் மதிப்பு ரூ. 33 கோடி என்று கூறப்படுகிறது. அவரது சொத்து மதிப்பு ரூ. 212 கோடி இருக்கும் என்றும் ஒரு தகவல் பரவுகிறது.தனது வருமானத்தை ஆடம்பரத்திற்கு மட்டும் செலவு செய்யாமல், தன்னால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு உதவுவதற்கும் ஜாக்கி ஷெராஃப் பயன்படுத்துகிறார். சுமார் 100 ஏழை குடும்பங்களுக்கு ஜாக்கி ஷெராஃப், பொருளாதார உதவி செய்வதாகவும், மருத்துவமனையில் ஒரு கணக்கு பராமரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி ஏழைக் குழந்தைகள் பசியுடன் இருந்தால், தன்னை உடனே அழைத்து தகவல் தெரிவிக்கலாம் என தொலைபேசி எண்ணையும் ஜாக்கி ஷெராஃப் வெளியிட்டுள்ளார். இப்படி பல உதவிகளை செய்து வரும் ஜாக்கி ஷெராஃபை நினைத்து பலரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.