இலங்கை
செம்மணி மனிதப்புதைகுழி கேட்டறிந்த சுவிஸ் தூதுவர்

செம்மணி மனிதப்புதைகுழி கேட்டறிந்த சுவிஸ் தூதுவர்
வடக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைக்கான சுவிற்ஸர்லாந்துத் தூதுவர் தலைமையிலான தூதரகக் குழுவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுச் செவ்வாய்க்கிழமை யாழ். சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் இலங்கைக்கான சுவிற்சர்லாந்துத் தூதுக்குழு கேட்டறிந்துகொண்டது. வடக்கு மாகாணத்திலுள்ள சில கிராமங்கள் இன்னமும் பின்தங்கியுள்ள நிலையிலேயே உள்ளன எனவும், அங்கு வீதிக் கட்டுமானங்கள் கூட இல்லை எனவும் வடக்கு மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டினார். அத்துடன் வடக்கு மாகாணத்தில் போரின் பின்னர் தொழிற்சாலைகள் போதுமானதாக இல்லாமையால் வேலைவாய்ப்பு சவாலாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாணத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடி என்பனவற்றுக்கான வளம் சிறப்பாக உள்ளபோதும், மூலப்பொருள்களாகவே இங்கிருந்து ஏனைய இடங்களுக்கு அவை கொண்டு செல்லப்படுகின்றன எனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் இங்கு பெறுமதிசேர் உற்பத்திகளாக மாற்றக்கூடிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதன் ஊடாக இங்குள்ள உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் எனவும் குறிப்பிட்டார்.
பலாலி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்தான விமான சேவைகள் தொடர்பிலும் சுவிற்சர்லாந்து தூதுவர் இந்தச் சந்திப்பின் போது கேட்டறிந்தார்.
இலங்கை முதலீட்டுச்சபையால் வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அதன் உட்கட்டுமானங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, செம்மணிப் புதைகுழி விவகாரம், தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம், மீள்குடியமர்வுச் செயற்பாடு, சிவில் நிர்வாகத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் தலையீடுகள், உள்ளூராட்சிமன்றங்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் தலைமையிலான தூதுக்குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டனர் மாகாணசபைத் தேர்தல், மாகாணசபை முறைமை தொடர்பாகவும் ஆளுநரிடம் தூதுக்குழுவினரால் கேள்வி எழுப்பப்பட்டது. கடந்த காலங்களில் மாகாணசபை முறைமையை பலவீனப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.