இந்தியா
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு… : முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு… : முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி
ஃபெங்கல் புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக இன்று (டிசம்பர் 3) கேட்டறிந்தார்.
அப்போது, “மாநில அரசு பாதிப்பை எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி – புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றியக் குழுவை அனுப்பிட வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை பிரதமர் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போது கொட்டிய கனமழையால் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்தனர்.
இதனை குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “ஃபெஞ்சல் புயலால் மக்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்தது கவலை அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களோடு என் எண்ணங்கள் இருக்கிறது.
உயிரிழந்தோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். நிவாரண பணிகளில் அரசுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினரும் செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.