பொழுதுபோக்கு
காதல் கதை எழுதுவார், ஆனா காதல் பண்ண தெரியாது; 63 வயதில் கொடுத்த பிறந்த நாள் பரிசு: கணவர் பற்றி மனம் திறந்த சுஜாதா மனைவி!

காதல் கதை எழுதுவார், ஆனா காதல் பண்ண தெரியாது; 63 வயதில் கொடுத்த பிறந்த நாள் பரிசு: கணவர் பற்றி மனம் திறந்த சுஜாதா மனைவி!
தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர் சுஜாதாவிற்கு நாம் தனியாக ஒரு அறிமுகம் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. அந்த அளவிற்கு அவரது எழுத்துகளுக்கு இன்றளவும் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றனர். தனது வாழ்நாளில் 100-க்கும் மேற்பட்ட நாவல்கள், 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 10 அறிவியல் புத்தகங்கள், மேடை நாடகங்கள் மற்றும் சில கவிதை தொகுப்புகளை சுஜாதா எழுதியுள்ளார்.இவை தவிர கமல்ஹாசனின் விக்ரம், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, இயக்குநர் ஷங்கரின் இந்தியன், முதல்வன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன் போன்ற படங்களுக்கு எழுத்தாளர் சுஜாதாவின் பங்களிப்பு மிக முக்கியமானவை. இப்படி பல பெருமைகள் கொண்ட மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் நினைவலைகள் குறித்து, அவரது மனைவி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவள் விகடன் யூடியூப் சேனல் உடனான நேர்காணலின் போது, இவற்றை அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, “என் கணவரை இழந்தது பெரும் இழப்பு. அவர் உயிரோடு இருந்த போது பலர் வீட்டிற்கு வந்தனர். அந்த நேரத்தில் நானும் பிஸியாக இருந்தேன். இப்போது, பத்திரிகை மற்றும் சினிமா துறையில் எனக்கு யாரையும் தெரியாது. நாங்கள் சிறுவயதில் வளர்ந்த விதம் வேறு. திருமணத்திற்கு பின்னர், அவரை முழுமையாக புரிந்து கொள்ளவே எனக்கு 15 ஆண்டுகள் ஆனது.அந்த காலத்தில் காதல் என்றாலே எங்களுக்கு என்னவென்று தெரியாது. என் கணவர் காதல் கதைகள் எழுதி இருப்பார். ஆனால், அவர் காதல் செய்து நான் பார்த்தது இல்லை. எப்போதுமே அவர் பிஸியாக இருந்தார். அவர் என்னுடன் இருந்த வரை பாதுகாப்பாக உணர்ந்தேன். அடுத்த நொடி குறித்து சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.அவர் மறைவதற்கு முன்பாக, நான் ஜப்பானிய மொழி கற்றுக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு புத்தகம் வாங்க வேண்டும் என்று அவரிடம் கூறினேன். அடுத்த நாளே அந்த புத்தகத்தை வாங்கி வந்து என் பிறந்தநாள் பரிசாக கொடுத்தார். அந்த வகையில், என் கணவரிடம் இருந்து முதல் பிறந்தநாள் பரிசு, என்னுடைய 63-வது வயதில் தான் கிடைத்தது. மற்றபடி, இருவரது பிறந்தநாளுக்கும் வாழ்த்துகள் கூட பரிமாறிக் கொண்டது இல்லை. மேலும், எங்களுக்கு இடையே அதிகப்படியான உரையாடல்களும் இருந்தது கிடையாது. ஒரு நாளில் அதிகபட்சமாக 4 அல்லது 5 வார்த்தைகள் தான் பேசிக் கொண்டோம்” என எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி தெரிவித்துள்ளார்.