வணிகம்
30 வயது முதல் 28 ஆண்டுகள் சேவைக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை கணக்கிடுவது எப்படி? – விரிவான தகவல்…!

30 வயது முதல் 28 ஆண்டுகள் சேவைக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை கணக்கிடுவது எப்படி? – விரிவான தகவல்…!
ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (Employees’ Pension Scheme (EPS) ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கு பலன் அளிக்கிறது. இது நவம்பர் 19, 1995 அன்று ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஓய்வுக்குப் பின் ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்கள்.
மேலும், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) அங்கம் வகிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் 58 வயதை அடையும்போது ஓய்வூதியத்தைப் பெறலாம். உங்களுடைய தற்போதைய வயது 30ஆகவும், அடிப்படை ஊதியம் ரூ.25,000 ஆகவும் இருந்தால், 28 ஆண்டுகள் ஓய்வூதியம் பெறும் சேவை இருந்தால், 58 வயதில் மாதாந்திர இபிஎஸ் ஓய்வூதியம் எவ்வளவு இருக்கும் என்பதை கணக்கிடுவோம்.
பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டம் (EPS) என்பது பணி ஓய்வுக்குப் பிறகு தகுதியான ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் ஒரு அங்கமாகும். இது 1995இல் தொடங்கப்பட்டது, ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு, ஓய்வூதியம் பெற உதவும். EPF திட்டத்திற்கு தகுதியான அனைத்து ஊழியர்களும் தானாகவே EPSக்கு தகுதி பெறுகின்றனர். ஓய்வூதியப் பலன்களைப் பெறுவதற்கு 58 வயதிற்குள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவைக்காலம் கட்டாயம்.
ஒரு தனிநபர் EPFO உறுப்பினராக இருக்க வேண்டும்.
ஒரு தனிநபர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
ஆரம்பகால ஓய்வூதியம் பெற தனிநபர் குறைந்தபட்சம் 50 வயதாக இருக்க வேண்டும் அல்லது வழக்கமான ஓய்வூதியத்திற்கு 58 வயதாக இருக்க வேண்டும்.
மாதாந்திர பங்களிப்பு: ஈபிஎஸ்-க்கு ஒரு நிறுவனத்தின் பங்களிப்பு, ஊழியரின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 8.33 சதவீதம் ஆகும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (EPF) பணியாளரின் ஊதியத்தில் 3.67 சதவீதத்தை முதலாளி வழங்குகிறார்.
இபிஎஸ் நியமனம் என்பது இபிஎஸ்-லிருந்து ஓய்வூதிய பலன்களைப் பெறுவதற்கு, கணக்கு வைத்திருப்பவர் ஒரு நபர் அல்லது சில நபர்களை தேர்ந்தெடுக்கும் ஒரு செயல்முறையாகும். பரிந்துரைக்கப்பட்டவர்கள், மனைவி, குழந்தைகள் அல்லது பெற்றோர் போன்ற குடும்ப உறுப்பினர்களாக இருக்கலாம். எனினும் சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு குடும்பம் இல்லை என்றால், அவர்கள் யாரை வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம்.
நீங்கள் 58 வயதை அடையும் முன் ஈபிஎஸ்-லிருந்து குறைக்கப்பட்ட ஓய்வூதியத்தைப் பெறலாம். ஆனால் அதற்கு சிலவற்றை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் குறைந்தபட்சம் 50 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் மற்றும் குறைந்தது 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
இபிஎஸ்-95இல் உறுப்பினர்களாக இருக்கும் மற்றும் 2014-க்குப் பிறகு பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற ஊழியர்கள், கூட்டு விருப்ப விண்ணப்பத்தை தாக்கல் செய்து, பிராந்திய PF கமிஷனரிடம் சமர்ப்பிப்பதன் மூலம் அதிக ஓய்வூதியத்தைத் தேர்வு செய்ய முடியும்.
ஈபிஎஃப் ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான சூத்திரம்: மாதாந்திர ஓய்வூதியத் தொகை = (ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் x ஓய்வூதிய சேவை) / 70.
குறைந்தபட்ச ஓய்வூதியம் 1,000 ரூபாய், அதிகபட்சம் 7,500 ரூபாய்.
நீங்கள் பெறும் மாதாந்திர ஓய்வூதியத் தொகை உங்கள் ஓய்வூதிய சம்பளம் மற்றும் சேவையைப் பொறுத்தது. ஃபார்முலாவில் பயன்படுத்தப்படும் சராசரி சம்பளம், கடந்த 12 மாதங்களாக உங்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் DA ஆகியவற்றின் சராசரியாகும்.
(தற்போதைய) ஊதிய உச்சவரம்பில் ரூ.15,000 பங்களிப்பு. ஒருவரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ரூ.25,000ஆக இருந்தாலும், அவர்களின் இபிஎஸ் ஓய்வூதியம் ரூ.15,000ஆக கணக்கிடப்படும். 28 ஆண்டுகள் சேவை இருக்கும் பட்சத்தில், தனிநபர்கள் ஓய்வூதியமாக 6,000 ரூபாய் பெறலாம். (ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் X ஓய்வூதியம் பெறக்கூடிய சேவை) /70 = (15,000×28)/70 = ரூ 6,000.