இலங்கை
சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி கிழக்கில் போராட்டம்!

சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி கிழக்கில் போராட்டம்!
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை – வெருகல் பூநகர் பகுதியில் இன்று (02) காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதன்போது பல்வேறு சுலோகங்களை எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள், மத சுதந்திர மீறல்கள், ஏனைய வன்முறைகள் இடம்பெறாமல் இருப்பதாக இருந்தால் வட கிழக்கு மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி இரண்டாம் நாளாக வெருகல் பிரதேசத்தில் இவ் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் தொடர்ச்சியாக 100 நாட்கள் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் குறித்த தரப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.