இந்தியா
Cyclone Fengal : ”துவம்சம் செய்த ஃபெஞ்சல் புயல்” – பொங்கலுக்கு ரெடியா இருந்த கரும்பு எல்லாம் போச்சு….

Cyclone Fengal : ”துவம்சம் செய்த ஃபெஞ்சல் புயல்” – பொங்கலுக்கு ரெடியா இருந்த கரும்பு எல்லாம் போச்சு….
பன்னீர்கரும்பு கனமழையால் சேதம்
தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் தொகுப்பில், பன்னீர் கரும்பும் இடம்பெறும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில், விழுப்புரம் அருகே உள்ள பிடாகம், குச்சிப்பாளையம், மரகதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் விவசாயிகள் 100 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் கரும்புகளை பயிரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரத்தில் இதுவரை கண்டிராத அளவுக்கு, “ஃபெஞ்சல்” புயல் காரணமாக மழை பெய்துள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நெற்பயிர்கள், உளுந்து பயிர்கள், கரும்பு என அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் அருகே உள்ள பிடாகம் குச்சிபாளையம் பகுதிகளில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக அரசு கொள்முதல் செய்வதற்காக பன்னீர் கரும்புகளை பயிரிடுகின்றனர் விவசாயிகள்.
இந்நிலையில் கனமழை காரணமாக 60 ஏக்கருக்கு மேற்பட்ட கரும்புகள் நிலத்தில் மடிந்துள்ளதால் (சாய்ந்துள்ளதால்), கரும்புகளை பயிரிட்டுள்ள விவசாயிகள் வேதனையில் உள்ளனர். ஏனென்றால் நாட்டு கரும்பு சாய்ந்திருந்தால் சர்க்கரை ஆலைக்கு அனுப்பலாம். ஆனால் இந்த பன்னீர் கரும்பு சாய்ந்து விட்டால் அதனை மறுபடியும், சரி செய்ய முடியாது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி விவசாயி ராஜா தெரிவிக்கையில், பிடாகம் மற்றும் குச்சிபாளையம் பகுதிகளில் 60 ஏக்கருக்கு பன்னீர் கரும்புகள் பயிரிட்டுள்ளோம். இன்னும் அறுவடைக்கு 45 நாள் இருக்கும் நிலையில், புயல் காரணமாக ஐந்து அடி, ஆறு அடி கரும்புகள் அனைத்தும் நிலத்தில் சாய்ந்து விட்டது. சாய்ந்த கரும்புகளை ஒண்ணுமே எங்களால் பண்ண முடியாது. ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் மூன்று லட்சம் வரை செலவு செய்து உள்ளோம். இக்கரும்பு நன்றாக வளர்ந்து இருந்தால் எங்களுக்கு ஒரு ஏக்கரில் 5 லட்சம் வரை லாபம் கிடைக்கும். ஆனால் இப்போ எல்லாத்தையும் இழந்துட்டு நிற்கிறோம் என தெரிவித்தார்.
மேலும் நம்மிடம் பேசிய அவர், இந்தப் பன்னீர் கரும்பு பராமரிப்புக்காக நகை எல்லாம் அடமான வச்சு இதனை பார்த்து பார்த்து வளர்த்தோம், ஆனா இப்போ ஒண்ணுமே இல்லாம போயிடுச்சு. இதுவரைக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாருமே நேர்ல வந்து பாக்கல. எனவே தமிழக அரசாங்கம் எங்களுக்கு உடனடியாக நிவாரணம் ஏதாவது வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.