வணிகம்
வருமானம் ரூ. 2,349 கோடி; லாபம் மட்டும் ரூ. 46 கோடி… ஈரோட்டில் ‘பன்னீர்’ சாம்ராஜ்ஜியத்தை ‘மில்கி மிஸ்ட்’ கட்டி எழுப்பியது எப்படி?

வருமானம் ரூ. 2,349 கோடி; லாபம் மட்டும் ரூ. 46 கோடி… ஈரோட்டில் ‘பன்னீர்’ சாம்ராஜ்ஜியத்தை ‘மில்கி மிஸ்ட்’ கட்டி எழுப்பியது எப்படி?
இந்தியாவில் பால் மட்டுமின்றி, நெய், பன்னீர், தயிர், ஐஸ்கிரீம் போன்ற பால் சார்ந்த பொருட்களுக்கும் எப்போதும் அதிக தேவை உள்ளது. இந்தச் சந்தையில் அரசு நிறுவனங்களும், சில பெரிய தனியார் நிறுவனங்களுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால், சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்களும் இத்துறையில் பெரிய வளர்ச்சி அடைய முடியும் என்பதை மில்கி மிஸ்ட் நிறுவனம் நிரூபித்துள்ளது. இந்த நிறுவனத்தின் பின்னணியில் இருப்பவர் சதீஷ்குமார்.ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், தனது 16 வயதில், 1994 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி, தனது தந்தையின் பால் தொழிலுக்கு உதவினார். குடும்ப வறுமையைப் போக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் இத்தொழிலில் ஈடுபட்டார். இன்று, அந்த 16 வயது சிறுவன் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள மில்கி மிஸ்ட் நிறுவனத்தை கட்டி எழுப்பியுள்ளார்.1997-ம் ஆண்டில், சதீஷ்குமார் ஈரோட்டின் பெருந்துறையில் மில்கி மிஸ்ட் நிறுவனத்தைத் தொடங்கினார். பெரும்பாலான நிறுவனங்கள் பால் விற்பனையில் கவனம் செலுத்தியபோது, சதீஷ்குமார் வித்தியாசமான பாதையைத் தேர்ந்தெடுத்தார். தமிழ்நாட்டில் மக்கள் பெரும்பாலும் உள்ளூரிலேயே பால் வாங்குவார்கள் என்பதையும், அரசு நிறுவனமான ஆவின் இருப்பதையும் சதீஷ்குமார் உணர்ந்தார். எனவே, வெறும் பால் விற்பனை நிறுவன வளர்ச்சிக்கு உதவாது என்பதைப் புரிந்துகொண்டு, மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களின் விற்பனையில் கவனம் செலுத்தினார்.இந்த மாற்றுக் கண்ணோட்டம்தான் மில்கி மிஸ்ட்டை மிகப்பெரிய நிறுவனமாக வளர்த்தது. பால் விற்பனையை விட, பன்னீர், தயிர், சீஸ் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் ஆயுள் காலம் (Self-life) அதிகம். மேலும், இவற்றின் மூலம் கிடைக்கும் லாபமும் அதிகம். இந்த வணிக உத்தியைச் சிறப்பாகக் கற்றுக்கொண்ட சதீஷ்குமார், பன்னீர் தயாரிப்பில் தனி முத்திரையைப் பதித்தார். “பன்னீர் என்றாலே மில்கி மிஸ்ட் பன்னீர்” என மக்கள் மனதில் இடம்பிடித்தது.பெருந்துறையில் முழுவதுமாக தானியங்கி முறையில் செயல்படக்கூடிய அதிநவீன பால் பொருட்கள் உற்பத்தி ஆலையை மில்கி மிஸ்ட் அமைத்துள்ளது. இங்கு ஒரு நாளைக்கு 1.5 மில்லியன் லிட்டர் பால் பதப்படுத்தப்படுகிறது. மில்கி மிஸ்ட் நிறுவனம் 67,000 விவசாயிகளிடமிருந்து பாலைக் கொள்முதல் செய்கிறது. இந்த விவசாயிகளுக்கு மாடு வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு, சத்தான தீவனங்கள் வழங்குவது, மற்றும் நிதி உதவிகள் எனப்பல வகைகளில் நிறுவனம் ஆதரவு அளிக்கிறது. இதனால், விவசாயிகள் தொடர்ந்து மில்கி மிஸ்ட் நிறுவனத்திற்குப் பால் வழங்கி வருகின்றனர்.மில்கி மிஸ்ட் நிறுவனம் விரைவில் ஐபிஓ (Initial Public Offering) வெளியிட உள்ளது. 2035 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஐபிஓ வெளியிடப்பட உள்ளது. இதில், 1785 கோடி புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலமும், 250 கோடி ரூபாய் விளம்பரதாரர்கள் தங்கள் வசம் உள்ள பங்குகளை விற்பதன் மூலமும் திரட்டப்பட உள்ளது. திரட்டப்படும் நிதியில், 750 கோடி கடன்களைத் திருப்பிச் செலுத்தவும், யோகர்ட், கிரீம், சீஸ் போன்றவற்றைத் தயாரிக்கும் ஆலையை விரிவாக்கம் செய்ய 414 கோடி ரூபாயும் பயன்படுத்தப்பட உள்ளது. 2024 ஆம் ஆண்டில், மில்கி மிஸ்ட் நிறுவனம் 2349 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 29% அதிகம். நிறுவனத்தின் லாபம் 46 கோடியாக அதிகரித்து, 137% உயர்ந்துள்ளது.மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதை, கடின உழைப்பு, புதுமையான சிந்தனை, மற்றும் சரியான வணிக உத்தி இருந்தால் சாதாரண பின்னணியில் இருந்தும் பெரிய வெற்றியை அடைய முடியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.