இலங்கை
செம்மணி புதைகுழிக்கு செல்லும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

செம்மணி புதைகுழிக்கு செல்லும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி பகுதியைப் பார்வையிட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று செல்லவுள்ளது.
இதனைத் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய பணிப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் இந்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதேவேளை செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கான் நடவடிக்கைகள் இன்று (04) முன்னெடுக்கப்பட்டது.
ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்கப்பெறவில்லை
அந்நிலையில், ஶ்ரீஜெயவர்வத்தன புர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கானர் கருவியை யாழ் பல்கலைகழகம் ஊடாக பெற்று அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்நடவடிக்கையை அடுத்து , திங்கட்கிழமை (04) குறித்த ஸ்கானரை பயன்படுத்தி ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களான ஆடைகள் மற்றும் பிற பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காட்டும் வகையில் செவ்வாய்க்கிழமை (05) செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் மதியம் 1.30 மணி முதல் , மாலை 5 மணி வரையில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சான்று பொருட்களை பார்வையிட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.