சினிமா
ரஜினி & சத்யராஜ் கருத்து முரண்பாடு எங்கே தொடங்கியது? வைரலாகும் பிளாஷ்பேக்..!

ரஜினி & சத்யராஜ் கருத்து முரண்பாடு எங்கே தொடங்கியது? வைரலாகும் பிளாஷ்பேக்..!
தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி திரைப்படம் இன்னும் 09 நாட்களில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் “கூலி” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டார்கள். குறித்த விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சத்யராஜ் குறித்து கூறிய கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதாவது “எனக்கும் சத்யராஜுக்கும் இடையே கருத்து ரீதியான முரண்பாடு இருக்கலாம். ஆனால் அவர் மனசுல பட்டதை நேரடியாக சொல்லிடுவார். மனசுல பட்டதை சொல்றவங்களை நம்பலாம். ஆனால் மனசுக்குள்ளேயே வச்சிட்டு இருக்குறவங்களை நம்ப முடியாது” என்று தெரிவித்துள்ளார்.இந்த உரை, இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்து வந்த கருத்து முரண்பாடு பற்றி மறைமுகமாகவும் நேரடியாகவும் உறுதிப்படுத்துவதாகவும் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.1980களில் “மிஸ்டர் பாரத்”, “நான் சிகப்பு மனிதன்”, “மூன்று முகம்” உள்ளிட்ட பல திரைப்படங்களில் இணைந்து நடித்த இருவரும், பல வருடங்களாக ஒரே திரைப்படத்தில் இணைந்து செயல்படாமல் இருந்தனர்.இது குறித்து சினிமா வட்டாரங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமென்றே பேசப்பட்டு வருகிறது.இந்நிலையில், இணையத்தில் பலர், சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வை மீண்டும் ஷேர் செய்து வருகிறார்கள்.காவிரி பிரச்சனையை அடுத்து தமிழகத்தில் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தில், நடிகர் சத்யராஜ் ரஜினிகாந்தை ஒரே மேடையில் தாக்கிப் பேசிய சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.அதாவது எதிர்ப்பு போராட்டத்தில் உரையாற்றிய நடிகர் சத்யராஜ் ,பொதுவாக சில மேடைகளில் சில பேரின் பெயரை சொன்னால் கைத்தட்டல் வாங்கலாம். யாருடைய பெயரை சொன்னால் நீங்கள் எல்லாரும் கைத்தட்டுவீர்களோ அவர்கள் பெயரை சொன்னால் கைத்தட்டல் வாங்கலாம். ஆனால் அப்படி அவர்கள் பெயரை சொல்லி கைத்தட்டல் வாங்குவதற்கு பதிலாக நான் நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகலாம். கர்நாடகாவில் தமிழனை அடிக்கிறார்கள், அதற்கு கண்டனம் தெரிவிப்பதற்காக வந்திருக்கிறோம், ஒரு நடிகனின் பெயரை சொல்லி கைத்தட்டல் வாங்குவதற்காக நான் வரவில்லை” என ரஜினிகாந்தை ஒரே மேடையில் நேரடியாகவே தாக்கிப் பேசினார். சத்தியராஜ் பேசிய இந்த விடயங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.இதனிடையே பல ஆண்டுகளுக்குப் பிறகு, “கூலி” திரைப்படத்தின் மூலம் ரஜினி – சத்யராஜ் இணைந்துள்ளனர். ஆனால், கடந்த கால நிழல்கள் இந்த புதிய கூட்டணிக்கே சாயலாக அமைந்துள்ளது. ரஜினியின் சமீபத்திய பேச்சு, தனக்கு சத்யராஜுடன் உறவு தெளிவாக இல்லையென்றாலும், அவரது நேர்மையான பேச்சு உண்மையை வெளிப்படுத்தும் என்பதற்கான சான்றாக இருக்கிறது என்கிறார்.