இந்தியா
பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் 8-வது நாளாக ஸ்டிரைக்: போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முற்றுகை- பரபரப்பு

பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் 8-வது நாளாக ஸ்டிரைக்: போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முற்றுகை- பரபரப்பு
புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (PRTC) தற்காலிக ஊழியர்கள், பணி நிரந்தரம் மற்றும் 7வது ஊதியக் குழுவின்படி சம்பளம் கோரி கடந்த ஜூலை 28-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் 8-வது நாளான இன்று, ஊழியர்கள் போக்குவரத்துத் துறை ஆணையர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் நடத்துனர் மயங்கி விழுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.முன்னதாக, PRTC தலைமை அலுவலகத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று 100 அடி சாலையில் உள்ள மேலாண் இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக ஊழியர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி, காலை பேருந்து பணிமனையிலிருந்து புறப்பட்ட ஊழியர்கள், தொழிற்சங்க கொடிகள் மற்றும் கோரிக்கை பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு முக்கிய சாலைகள் வழியாகச் சென்று, 100 அடி சாலையில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.ஆணையர் அலுவலகத்தின் முன்பக்க கதவுகளை போலீசார் பூட்டி, ஊழியர்கள் உள்ளே நுழையாதவாறு தடுப்புக் கட்டைகளை அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தடையை மீறி செல்ல முடியாததால், ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கோஷமிட்டனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் நடத்துனர் ஒருவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, கோஷங்களை எழுப்பிய ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.