பொழுதுபோக்கு
திறமை முக்கியம் இல்ல… அவங்க கூப்பிட்டா போகனும்; அத நானும் சந்தித்தேன்: பாலியல் சர்ச்சை பற்றி சனம் ஷெட்டி ஓபன்!

திறமை முக்கியம் இல்ல… அவங்க கூப்பிட்டா போகனும்; அத நானும் சந்தித்தேன்: பாலியல் சர்ச்சை பற்றி சனம் ஷெட்டி ஓபன்!
கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அம்புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சனம் ஷெட்டி. தொடர்ந்து, மாயை, விலாசம், கதம் கதம், கவலை வேண்டாம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். இவர் 2016-ம் ஆண்டு மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் வெற்றி பெற்று அசத்தினார். பின்னர், 2022 ஆம் ஆண்டு வெளியான மகா படத்தில் கெஸ்ட் ரோலில் சனம் ஷெட்டி நடித்திருந்தார். அவர் சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரை ரியாலிட்டி ஷோ-களிலும் பங்கேற்றார். குறிப்பாக, 2020 ஆம் ஆண்டு விஜய் டி.வி-யின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த போட்டியில் 63 நாட்கள் தாக்குபிடித்து விளையாடிய சனம் ஷெட்டி, ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருந்தார். இருப்பினும், அதே நிகழ்ச்சில் கலந்து கொண்ட சகபோட்டியாளர் தர்ஷன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். சனம் ஷெட்டி, சமீப காலமாக பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், சினிமாவில் நடிக்க நடைபெறும் காஸ்டிங் கவுச், அட்ஜெஸ்ட்மெண்ட் போன்றவைகளுக்கு எதிராக பேசி வருகிறார். அண்மையில் ரம்யா மோகன் என்ற சமூக வலைதள பயனர் ஒருவர், விஜய் சேதுபதி தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்துவிட்டதாகக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அவர் மீது விஜய் சேதுபதி சார்பில் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலில் சனம் ஷெட்டி பேசியுள்ளர். அந்த வீடியோவில் அவர், “ரம்யா மோகன் என்பவர் யார் என்று எனக்கு தெரியவில்லை. பொதுவாக இங்க காஸ்டிங் கவுச் இருக்கிறது என்றால், ஆம் இருக்கிறது என்பேன். இதனை நானே எதிர்கொண்டுள்ளேன். எனக்கு அப்படிப்பட்ட போன் வரும்போது, நான் கழுவி ஊத்தி இருக்கேன். ஆனால், இப்போது வரும் புதுமுக நடிகைகளுக்கு அதிக அனுபவம் இருக்காது. அவர் உடனே அந்த வலையில் சிக்கி விடுவார்கள். ஸ்ருதி நாராயணன் விவகாரம் கூட காஸ்டிங் கவுச்-வுடன் தொடர்புடையது தான். அதற்கு நீங்கள் ஒத்துக் கொள்ளவில்லை என்றால், கேட்டை குளோஸ் செய்து விடுகிறார்கள். அதனால், இப்போதெல்லாம் திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சினிமாவுக்கு தேவையான திறமை அது மட்டும் தான் என்பதுபோல் ஆகிவிட்டது. நமது சினிமா துறையே நாறுகிறது. அதனை செய்பவர்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள். என்னைப் போல் ஒன்று இரண்டு பேர் தான் இதைப் பற்றி பேசுகிறோம். சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் கடினப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். நான் அதை செய்ய மாட்டேன் என்று முடிவு எடுத்திருக்கிறேன். அதன்படி தான் நான் இருப்பேன். ஆனால், இது தவறு. அதனை இயல்பாக மாற்றக்கூடாது. இப்போது அதனை இயல்பாக மாற்றி வருகிறார்கள். தற்போது விஜய் சேதுபதி மீது வைக்கப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. அதனால், அது பற்றி என்னால் சொல்ல முடியாது. ரம்யா மோகன் யார் என்று தெரியாது. அந்தப் பதிவில் அவரது தோழியின் பெயர் என எதுவும் இல்லை. இது அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு. ஆனால், கேரவனில் நடப்பது பற்றி நான் கேள்விப்பட்டிருக்கேன். என்னிடம் யாரும் அப்படி கேட்டதில்லை. நான் அந்த அளவுக்கு பேச்சை தொடர்ந்தது இல்லை. உடனே கட் செய்து விடுவேன். அதுபோல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதேபோல், போதைப் பொருள் கலாச்சாரமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் நடந்து கைதுகள் அதற்கு எடுத்துக்காட்டு.” என்று அவர் குறித்துள்ளார்.