இலங்கை
மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்காமல் விமர்சிப்பதை ஏற்கமுடியாது;

மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்காமல் விமர்சிப்பதை ஏற்கமுடியாது;
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி தெரிவிப்பு!
மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதாயின் முழுமையாக, முறையாகப் பகிர வேண்டும். அதிகாரங்களை முறையாகப் பகிராமல் மாகாண சபை முறைமை தோல்வியடைந்துள்ளது எனக் கூறுவதை ஏற்க முடியாது- இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
மாகாணசபை முறைமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் பல தனிநபர் பிரேரணைகளை முன்வைத்துள்ளேன். மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான அவசியம் அரசாங்கத்துக்குக் காணப்படுகின்ற நிலையில் அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதை அவதானிக்கமுடிகிறது. 2013ஆம் ஆண்டுக்கு பின்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்தமுடியாத சூழலே காணப்படுகிறது. இதற்கு 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தான் பொறுப்புச் சொல்லவேண்டும்.
வலது கையால் வழங்கிய அதிகாரத்தை இடது கையால் பறிக்கும் நிலைக்கு மாகாணசபை தள்ளப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கு உரித்தான அதிகாரங்களை ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக பறித்தெடுத்துள்ளார். சுகாதாரம், கல்வி மற்றும் நிர்வாக கட்டமைப்பில் இந்த நெருக்கடி நிலைமை காணப்படுகிறது. மாகாணங்களுக்குரிய விடயதானங்கள் பலவந்தமான முறையில் மத்திய அரசுக்கு மீளப்பெறப்பட்டுள்ளன.
அதிகாரங்களை முறையாகப் பகிராமல் மாகாணசபைகள் ‘வெள்ளையானை’ என்று சித்தரிக்கப்படுவது முறையற்றது. மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்காமல், கைவிலங்கிட்டு எதனையும் செய்யமுடியாது. இவ்வாறான செயற்பாடுகளால் மாகாணசபைகள் வினைத்திறனாகச் செயற்படாமல், வெள்ளை யானை போன்றே காட்சியளிக்கும் – என்றார்.