பொழுதுபோக்கு
‘கிங்டம்’ படத்துக்கு குவியும் எதிர்ப்பு: திரையரங்கை முற்றுகையிட்ட நாம் தமிழர்; திருச்சியில் பரபரப்பு

‘கிங்டம்’ படத்துக்கு குவியும் எதிர்ப்பு: திரையரங்கை முற்றுகையிட்ட நாம் தமிழர்; திருச்சியில் பரபரப்பு
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா நடிப்பில் ‘கிங்டம்’ என்ற திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகியது. இப்படத்தில் இலங்கை தமிழர்களை குற்றப்பரம்பரை போல, மிகத் தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சியமைப்புகள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனத்தை தெரிவித்தார். இதேபோல், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், கிங்டம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் திருச்சி சோனா மீனா திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கிங்டம் திரைப்படத்தில் ஈழத் தமிழர்களை குறித்து அவதூறான காட்சிகள் இருப்பதாக கூறி இத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும், தமிழகத்தில் திரையிட்ட அனைத்து இடங்களிலும் இத்திரைப்படத்தை உடனே நிறுத்த வேண்டும் எனக் கூறி நாம் தமிழர் கட்சியினர் இன்று திரையரங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திருச்சி சோனா மீனா திரையரங்கிற்கு வந்த நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சரவணன் தலைமையிலான அக்கட்சியினர் திரையரங்கிற்கு சென்று மேலாளரிடம் திரைப்படத்தை நிறுத்த வலியுறுத்தி மனு அளித்தனர். மேலும், திரையரங்க வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கிங்டம் திரைப்படத்தின் பதாகைகளையும் அகற்றுமாறு கூறியுள்ளனர். திரையரங்கு தரப்பில் பதாகைகளை அகற்றி விடுவோம், திரையரங்க உரிமையாளர்களிடம் பேசி திரைப்படம் நிறுத்துவது தொடர்பாக ஆலோசிக்கிறோம் எனக் கூறியதன் அடிப்படையில் அவர்கள் சோனா மீனா திரையரங்கை விட்டு கலைந்து சென்றனர்.இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சரவணன் தெரிவிக்கையில்; தமிழகம் முழுவதும் இத் திரைப்படத்தை உடனடியாக திரையரங்குகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும், திரையரங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற வேண்டும் எனவும், அப்படி இல்லை என்றால் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் கூறினர். மேலும், தமிழக அரசு இத்திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.நாம் தமிழர் கட்சியினரின் கோரிக்கையை அடுத்து திரைப்படத்தின் காட்சிகள் இன்று ரத்து செய்யப்பட்டது. மேலும், திரையரங்க வளாகத்தில் இருந்த பேனர்களை திரையரங்க ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தியேட்டரை முற்றுகையிட வந்ததை முன்னிட்டு கன்போன்மென்ட் காவல்துறை சார்பில் கண்ட்டோன்மென்ட் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். செய்தி: க.சண்முகவடிவேல்.