இலங்கை
பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகள் செயலாளர்களின் கட்சிசார்ப்பு செயற்பாடுகள் – எதிர்தரப்பினர் குற்றச்சாட்டு

பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகள் செயலாளர்களின் கட்சிசார்ப்பு செயற்பாடுகள் – எதிர்தரப்பினர் குற்றச்சாட்டு
பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி பிரதேச சபைகளின் செயலாளர்கள் இருவரும் தாம் பிரதேச சபையின் செயலாளர் என்ற பதவி நிலையை மறந்து பிரதேச சபையின் ஆளும் கட்சியின் செயலாளர்கள் போன்று நடந்து கொள்வதாக எதிர்தரப்பு உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் எதிர்தரப்பு உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில்
பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு கடந்த 28.07.2025 அன்று ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி பிரதேச சபை உறுப்பினர் ,ஈஸ்வரன் டயாளினி அவர்களும். பூநகரி பிரதேச சபைக்கு இதே திகதியில் நிக்சன் மேரிசுவர்ணா அவர்களும் பின்வரும் பிரேரணை ஒன்றை சமர்பித்திருந்தனர்.
அதாவது “தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைக்கு உள்நாட்டு விசாரணைகள் நீதியை பெற்றுதராது ஆகவே சர்வதேச சமூகம் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை என்பன ஒரு சர்வதேச விசாரணை பொறிமுறையை உருவாக்கி தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும்” என்ற பிரேரணையை இருவரும் எழுத்து மூலம் வழங்கியிருந்தனர்.
ஆனால் 01.08.2025 திகதியில் பூநகரி பிரதேச சபையின் செயலாளரின் கையொப்பத்துடன் 14.08.2025 திகதியில் இடம்பெறவுள்ள மூன்றாவது சபை அமர்வு நிகழ்ச்சி நிரலில் பிரேரணைகள் ஏதும் இருப்பின் நான்கு கடமை நாட்களுக்கு முன்னதாக கையளிக்ககப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் குறித்த எதிர்தரப்பு உறுப்பினர் சமர்பித்த பிரேரணை திட்டமிட்டு செயலாளரின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாது நீக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் செயலாளரினால் 12.08.2025 நடக்கவுள்ள கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் ஈஸ்வரன் டயாளினி சமர்பித்த பிரேரணையை அப்படியே தலைகீழாக மாற்றி மக்கள் மத்தியில் அவர்கள் வெறுப்பு உண்டாகும் வகையில் இன அழிப்பு உள்நாட்டு விசாரணை தேவை என தலைப்பிட்டு அனுப்பிள்ளார்.
மேற்படி இரண்டு சம்பவங்களும் தங்கள் கட்சி மீது மக்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தும் வகையில் செயலாளர்களினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.
எனவே இது தொடர்பில் ஆளுநர், வடக்கு உள்ளுராட்சி ஆணையாளர், உள்ளிட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதோடு, சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றியும் ஆராய்ந்து வருகின்றோம் என எதிர்தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை