பொழுதுபோக்கு
டி.எம்.எஸ்க்கு பதிலாக எஸ்.பி.பி; சிவாஜிக்கு பாடிய முதல் பாட்டு: தன்னையே மாற்றி நடித்த நடிகர் திலகம்!
டி.எம்.எஸ்க்கு பதிலாக எஸ்.பி.பி; சிவாஜிக்கு பாடிய முதல் பாட்டு: தன்னையே மாற்றி நடித்த நடிகர் திலகம்!
`பொட்டு வைத்த முகமோ’ பாடல், மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனுக்கு முதன் முதலாகப் பாடியது. இந்தப் பாடல் உருவான விதம் குறித்த சுவாரசியமான தகவல் பற்றி பார்ப்போம்1960-களில் எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜிக்கு டி.எம்.செளந்தரராஜன்தான் அதிகம் பாடி வந்தார். அப்போது, தமிழ் சினிமாவுக்கு ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் போன்ற நடிகர்கள் வந்துகொண்டிருந்தனர். இவர்களுக்கெல்லாம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடி பிரபலமானார். இந்நிலையில், சி.வி.ராஜேந்திரன் இயக்கிய ‘சுமதி என் சுந்தரி’ திரைப்படத்தில், சிவாஜிக்கு எஸ்.பி.பி. பாடும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் இந்த வாய்ப்பு வேறு ஒரு பாடகருக்குக் கொடுக்கப்பட்ட நிலையில், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், பாலுவைத் தேர்ந்தெடுத்தார். சிவாஜி போன்ற பெரிய நடிகருக்குப் பாடப்போகிறோம் என்ற பயத்துடன் பாலு பாடல் பதிவுக்குச் சென்றார்.பொதுவாக, பாடல் பதிவுக்கு வராத சிவாஜி, அன்று ஸ்டுடியோவுக்கு வந்ததைப் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். சிவாஜி, பாலுவை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று, “எனக்காக உன் பாணி மாற வேண்டும் என்று யாராவது சொல்லி குழப்பி விடுவார்கள் என்று நினைத்தேன். அதனால்தான் இங்கே வந்தேன். நீ உன் பாணியில் பாடு. அதற்கேற்றபடி நான் நடித்துக் கொள்கிறேன்” என்று கூறினார். சிவாஜியின் இந்த வார்த்தைகள் பாலுவுக்குப் பெரிய தைரியத்தையும், நம்பிக்கையையும் கொடுத்தன.பின்னர், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், பி.சுசீலாவும் சேர்ந்து ‘பொட்டு வைத்த முகமோ’ பாடலைப் பாடினர். 1971 ஏப்ரல் 14-ம் தேதி வெளியான ‘சுமதி என் சுந்தரி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. படத்தின் பாடல் காட்சியில், பாலுவின் பாட்டுக்கு ஏற்ப சிவாஜி தனது நடிப்பை மாற்றியதைக் கண்டு பாலு பிரமித்துப்போனார்.
