இலங்கை
செம்மணிப் புதைகுழி விவகாரம்; குற்றவாளிகள் எவரும் தப்பிப்பதற்கு விடோம்!
செம்மணிப் புதைகுழி விவகாரம்; குற்றவாளிகள் எவரும் தப்பிப்பதற்கு விடோம்!
கடற்றொழில் அமைச்சர் உறுதி
செம்மணிப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் முறையாக நடத்தப்பட்டு வருகின்றன. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
காணி உரிமம் வழங்கும் வேலைத்திட்டத்தை வடக்கில் இருந்தே ஆரம்பித்துள்ளோம். வடக்கு மக்களின் வாழ்வில் என்றைக்கு வசந்தம் துளிர்விடுகின்றதோ அன்று தான் எமது வாழ்விலும் வசந்தம் ஏற்படும். ஏனெனில், இது மக்களுக்கான அரசாங்கமாகும். ரணிலுடன் இருக்கும்போது சுமந்திரனுக்கு இராணுவம் நல்லது. யாழ்ப்பாணம் நூல்கத்தை எரித்த பாவிகளின் பைல்களை தூக்கிக்கொண்டு திரியும்போது தமிழ் மக்களின் பிரச்சினை அவருக்குத் தெரிய வரவில்லை. ஆனால் இன்று அவர் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கின்றார். மட்டக்களப்பில் 10, 15 பேரை அழைத்து சாணக்கியன் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றார். அவர் நாமல் ராஜபக்சவின் நீலப்படையணியில் இருந்த ஒருவராவார். கடந்தகால கொலைகள் தொடர்பில் கண்டறியப்படவேண்டும். அதனால்தான் செம்மணிப் புதைகுழி தொடர்பான அகழ்வுப்பணி மற்றும் விசாரணைக்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கிவருகிறது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக் கிடையாது. குற்றவாளிகளை நாங்கள் கண்டுபிடித்துத் தண்டிப்போம். மாறாகக் காப்பாற்றமாட்டோம். காற்றாலை மின்உற்பத்திக்கு கடந்த காலங்களில் இந்தப்பாவிகள்தான் காணி வழங்கினார்கள், அதற்குரிய அனுமதியையும் இந்தப் பாவிகளே வழங்கினர். கனியமணல் அகழ்வுக்கும் ராஜபக்ச, ரணில் ஆட்சியில் அமைச்சராக இருந்த பாவிகள் தான் அனுமதி வழங்கினர்- என்றார்.
