இந்தியா
துப்புரவு பணியாளர்களுக்கு சம்பள பாக்கி: தலைமைச் செயலர் வீட்டை முற்றுகையிட்ட புதுச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏ
துப்புரவு பணியாளர்களுக்கு சம்பள பாக்கி: தலைமைச் செயலர் வீட்டை முற்றுகையிட்ட புதுச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏ
புதுச்சேரி அரசின் மூலம் உள்ளாட்சி துறையின் கீழ் ஒப்பந்ததாரர்கள் துப்புரவு பணியாளர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். புதுச்சேரி முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவுபணியாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.இந்நிலையில், ஊசுடு தொகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு 3 மாதமாக ஒப்பந்ததாரர்கள் ஊதியம் வழங்க வில்லை என்று கூறி லாஸ்பேட்டை இ.சி.ஆர். சாலையில் உள்ள முன்னாள் அமைச்சரும் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சாய் ஜெ சரவணன் குமார் வீட்டுக்கு இன்று அதிகாலை சென்று முறையிட்டனர். ஊதியம் வழங்கப்படாததால் குடும்பத்தை நடத்துவதில் சிரமமாக உள்ளது என கண்கலங்கினர்.இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த முன்னாள் பா.ஜ.க அமைச்சர் சாய் ஜெ சரவணகுமார் உடனே அவர்களை அழைத்துக் கொண்டு கோரிமேடு இந்திரா நகர் பகுதியில் உள்ள தலைமைச் செயலர் சரத் சவுகான் வீட்டுக்கு சென்றார். சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக வீட்டின் வெளியே துப்புரவு பணியாளர்களுடன் சாய் ஜெ சரவணகுமார் காத்திருந்தார். அங்கு வந்த கோரிமேடு போலீசாரிடம் துப்புரவு பணியாளர்களுக்கு இன்றைக்குள் ஊதியம் வழங்காவிட்டால் அந்த இடத்தை விட்டு செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து, தலைமைச் செயலர் சரத் சவுகான் எம்.எல்.ஏ மற்றும் துப்புரவு பணியாளர்களை வீட்டுக்குள் அழைத்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இன்னும் ஓரிரு தினத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தார். இதையடுத்து, எம்.எல்.ஏ. சாய் ஜெ சரவணன்குமார் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.
