இலங்கை
ஓமந்தையில் கோர விபத்து: இருவர் பலி; பலர் படுகாயம்!
ஓமந்தையில் கோர விபத்து: இருவர் பலி; பலர் படுகாயம்!
வவுனியா, ஓமந்தை – ஏ-9 வீதியில் நேற்று இரவு நடந்த விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கண்டியிலிருந்து முல்லைத்தீவு, விசுவமடு நோக்கிப் பயணித்த கப்ரக வாகனம் ஓமந்தை-மாணிக்கர் வளவுப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பாரவூர்தி ஒன்றுடன் மோதித் தடம்புரண்டது. அதில் பயணித்த பெண்கள், சிறுவர்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் வீதியில் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தனர்.
வீதியால் பயணித்த பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். சம்பவ இடத்திலேயே பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் 5 பேர் சிறுவர்கள் என்றும் 8 பேர் பெண்கள் என்றும் மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன .
வாகனத்தில் பயணித்த அனைவரும் உறவினர்கள் என்றும், கண்டியில் நடை பெற்ற மரண வீடு ஒன்றுக்குச் சென்று விட்டு மீண்டும் விசுவமடு நோக்கிப் பயணித்த போதே விபத்தில் சிக்கினர் என்றும் தெரியவருகின்றது.
அதேவேளை, விபத்தில் சிக்கிய சிறுவன் உட்பட மூவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர் என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன. இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக ஓமந்தைப்பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
