இலங்கை
மன்னாரில் காற்றாலைக்கு எதிராக வடக்கு – கிழக்கை ஒன்றுதிரட்டி நாளைமறுதினம் பெரும் போர்!
மன்னாரில் காற்றாலைக்கு எதிராக வடக்கு – கிழக்கை ஒன்றுதிரட்டி நாளைமறுதினம் பெரும் போர்!
மன்னாரில், இரண்டாம்கட்ட காற்றாலைக் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராகவும், கனிம அகழ்வுக்கு எதிராகவும் வடக்கு – கிழக்கு ரீதியாக மக்களைத் திரட்டி நாளைமறுதினம் வியாழக்கிழமை பெரும் போராட்டம் இடம்பெறும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
மண்ணையும் மக்களையும் மீட்கவே. ஆயுதப்போராட்டமும், அகிம்சைவழிப் போராட்டமும் இந்த மண்ணில் இடம்பெற்றன. இன்று மன்னார் மண்பெரும் ஆபத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. மன்னாரில், இரண்டாம்கட்ட காற்றாலைக் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராகவும். கனிம அகழ்வுக்கு எதிராகவும் மக்கள் கடந்த பத்து நாள்களுக்கும் மேலாகப் போராடிவரும் நிலையில், இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லவேண்டிய தேவை உள்ளது.
எனவே, எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மன்னார் பஜார் பகுதியில் வடக்கு – கிழக்கு ரீதியாக மக்களைத் திரட்டிப் பெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். ‘எமது நிலம் எமக்கு வேண்டும்’ எனும் தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மன்னார் இன்று எதிர்கொண்டுள்ள பிரச்சினை, மன்னாருக்கு மட்டுமான பிரச்சினையல்ல. இது ஒட்டுமொத்த தாயகத்துக்குமான பிரச்சினை. எனவே. இதில் ஏனைய மாவட்டங்களின் மக்களும், அரசியற் தலைவர்களும் கலந்து கொள்ளவேண்டும், தென்னிலங்கைக்கு நாங்கள் பாடம் புகட்டும் வகையில் எமது மண்ணையும் மக்களையும் காப்பற்றும் வகையில் இந்தப் போராட்டம் இடம்பெறும் – என்றார்.
