இந்தியா
வாக்ரி இனத்தை புதுச்சேரி பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும்; வி.சி.க வலியுறுத்தல்
வாக்ரி இனத்தை புதுச்சேரி பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும்; வி.சி.க வலியுறுத்தல்
தமிழகத்தைப் போல நரிக்குறவர், குருவிக்காரர் என அறியப்படும் வாக்ரி இனத்தவரை புதுச்சேரியிலும் பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் ஜடோத் உசேனிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.புதுச்சேரி மாநில பழங்குடியின மக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிவதற்காக தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் ஜடோத் உசேன் புதுச்சேரி வருகை புரிந்தார். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகள் தமிழ்மாறன், செல்வந்தன், அரிமா தமிழன், எழில்மாறன், தமிழ்வாணன் ஆகியோர் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமையில் பழங்குடியின ஆணைய உறுப்பினர் ஜடோத் உசேனிடம் பழங்குடியினர் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.அதில் நரிக்குறவர் அல்லது குருவிக்காரர் இனத்தை தமிழகத்தில் பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதைப் போல புதுவையிலும் சேர்க்க வேண்டும். தற்போது புதுச்சேரி பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் உள்ள மலைக்குறவன், குருமன்ஸ், எருக்குலா, காட்டுநாயக்கன் ஆகிய சாதிகளின் பழங்குடியின தன்மை, வாழிடம், கலாச்சார கூறுகள் குறித்து மானுடவியலாளர்களைக் கொண்டு முறையான கள ஆய்வு மேற்கொண்ட பின்பு பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும்.அதேபோல் மதுரி பட்டேல் எதிர் பழங்குடியினர் ஆணைய கூடுதல் ஆணையர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் பழங்குடியின மக்களின் நலங்களுக்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் எஸ்.எல்.எஸ்.சி (SLSC), டி.எல்.வி.சி (DLVC), எஸ்.ஜே.ஹெச்.ஆர் (SJHR), எஸ்.சி, எஸ்.டி (SC/ST) விஜிலென்ஸ் செல் போன்ற அமைப்புகளை புதுச்சேரியில் ஏற்படுத்தி உண்மையான பழங்குடிகளின் கல்வி வேலை வாய்ப்பு உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.பழங்குடியினர் தொடர்பான திட்டங்களை வகுக்கவும், நலத்திட்டங்கள் உரிய முறையில் கிடைத்திடவும், சான்றிதழ்கள் எளிதில் கிடைக்கவும், சரிபார்க்கவும் மானுடவியல் ஆய்வாளர்களை புதுச்சேரி அரசு நியமிக்க தேசிய பழங்குடியினர் ஆணையம் வலியுறுத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
