பொழுதுபோக்கு
நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய தடை: முன் ஜாமீன் வழங்கி கேரள ஐகோர்ட் உத்தரவு
நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய தடை: முன் ஜாமீன் வழங்கி கேரள ஐகோர்ட் உத்தரவு
தமிழ் சினிமாவில் அறிமுகமான சில படங்களிலேயே கிராமத்து கதாநாயகி, துறுதுறுப்பான பெண் என பல பரிமாணங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை லட்சுமி மேனன். தனது இயல்பான நடிப்பால் பல வெற்றிப் படங்களில் நடித்தார். கேரளாவைச் சேர்ந்த லட்சுமி மேனன், 2011ஆம் ஆண்டு மலையாளத்தில் வினயன் இயக்கிய ‘ரகுவிண்டெ சுவந்தம் ரசியா’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, 2012-ல் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘கும்கி’ திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தக் கிராமத்து காதல் கதை அவருக்கு மிகப்பெரிய வெற்றியையும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரவலான அறிமுகத்தையும் பெற்றுத் தந்தது. இப்படத்தில் அவரது கதாநாயகி கதாபாத்திரம், கிராமத்து வாசிகளைப் போன்ற தோற்றத்துடன், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வெகுவாகப் பேசப்பட்டது.’கும்கி’ வெற்றிக்கு பிறகு, லட்சுமி மேனன் தமிழில் பிஸியான நடிகையாக மாறினார். அதே ஆண்டில், சசிகுமாருடன் இணைந்து நடித்த ‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தில் அவரது துணிச்சலான நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து, ‘குட்டிப்புலி’, ‘பாண்டிய நாடு’ போன்ற படங்களும் வெற்றி பெற்றன. 2014ஆம் ஆண்டு வெளியான ‘ஜிகர்தண்டா’ திரைப்படம், லட்சுமி மேனனின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான படமாக அமைந்தது. இந்நிலையில், கொச்சியில் ஐ.டி. ஊழியர் கடத்தல் வழக்கில் நடிகை லட்சுமி மேனனிடம் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டிருந்த நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மதுபான பாரில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஐ.டி. ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், பின்னர் கடத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்தக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் நடிகை லட்சுமி மேனன் என குற்றம்சாட்டப்பட்டது.இப்புகாரின் அடிப்படையில், ஐ.டி. ஊழியரைக் கடத்தியதாகக் கூறப்படும் மிதுன், அனீஷ், சோனா மோல் ஆகியோரை காவல்துறை ஏற்கெனவே கைது செய்தது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக நடிகை லட்சுமி மேனனிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்திருந்தது. ஆனால், இந்தத் தகவல் அறிந்ததும் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் நடிகை லட்சுமி மேனன் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். நடிகை லட்சுமி மேனனுக்கு முன் ஜாமின் வழங்கிய கேரள கேரள உயர்நீதிமன்றம், செப்டம்பர் 17ம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
