இலங்கை
ரணிலின் உடல்நிலை சீராகவே இருக்கிறது
ரணிலின் உடல்நிலை சீராகவே இருக்கிறது
கொழும்பு தேசிய மருத்துவமனை பதில் பணிப்பாளர் தெரிவிப்பு
கொழும்பு தேசிய மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை சீராக உள்ளது என்று கொழும்பு தேசிய மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் மருத்துவர் பிரதீப் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
வயது காரணமாக அவருடைய இரத்த அழுத்தம் சற்று அதிகமாக இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே அவர் தீவிர சிசிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ள பதில் பணிப்பாளர், அவர் ஆபத்தான கட்டத்தில் இல்லை என்று கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
ஆயினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்றும், அவரது உடலில் உள்ள குருதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது என்றும் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாத நிலை ஏற்படலாம். நீதிமன்றத்தில் பலமணி நேரம் காத்திருந்ததாலும், மின்சாரம் தடைப்பட்டதாலும், நீண்ட நேரம் நீர் அருந்தாமையாலும் நீர்ச்சத்துக் குறைபாடு அவருக்கு ஏற்பட்டுள்ளது. அவரை மூன்று நாள்கள் கட்டாய ஓய்வில் வைத்து, நீர்ச்சத்துக் குறைபாட்டுக்கு சிகிச்சையளிக்க வேண்டும். அவ்வாறு சிகிச்சை அளிக்காவிட்டால், இதயப் பிரச்சினைகள், சிறுநீரகப் பிரச்சினைகள் மற்றும் பிறசிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்றும் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்திற் கொண்டு, அரசியல்வாதிகள் மற்றும் நலன்விரும்பிகள் அவரைப் பார்வையிடுவதை மட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
