இலங்கை
கல்வியில் மாற்றத்தை விரைந்து ஏற்படுத்துக – வடக்கு ஆளுநர் பணிப்பு!
கல்வியில் மாற்றத்தை விரைந்து ஏற்படுத்துக – வடக்கு ஆளுநர் பணிப்பு!
எமது மாகாணத்தில் கல்வியில் மாற்றத்தை விரைவாக ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு வலயக்கல்விப் பணிப்பாளர்களுடன் சேர்த்து எங்கள் அனைவருக்கும் உள்ளது. ஒவ்வொருவரும் அர்ப்பணிப்பாக அதற்காக செயலாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு பாடசாலைகளின் வளர்ச்சி அந்தந்தப் பாடசாலையின் அதிபரையே சாரும். எனவே அந்தந்த சமூகத்துக்கு உரிய பொறுப்புகளை அந்தந்தப் பாடசாலை அதிபர்களே ஏற்கவேண்டும். ஒவ்வொரு வலயக்கல்விப் பணிப்பாளர்களும் அடிக்கடி பாடசாலைகளுக்கு களப் பயணம் மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு செல்லுகின்ற பொழுது அங்கே காணப்படுகின்ற குறைபாடுகள் மற்றும் வளப் பங்கீடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வளப்பங்கீடுகளுக்கு வலயக்கல்விப் பணிப்பாளர்களே பொறுப்பு. தங்களின் பொறுப்புகளை உரியமுறையில் நிறைவேற்றாத வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்- என்றார்.
