இலங்கை
இ-பாஸ்போர்ட் கொள்வனவுக்கான டெண்டர் வழங்கப்பட்ட விதம் தொடர்பில் விசாரணை!

இ-பாஸ்போர்ட் கொள்வனவுக்கான டெண்டர் வழங்கப்பட்ட விதம் தொடர்பில் விசாரணை!
கடந்த அரசாங்கத்தின் போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு 05 மில்லியன் “இ-பாஸ்போர்ட்” கொள்வனவுக்கான டெண்டர் வழங்கப்பட்ட விதம் தொடர்பில் தேசிய கொள்வனவு குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டுக் கொள்வனவு தொடர்பான டெண்டர் வழங்கப்பட்ட விதத்தை சவாலுக்குட்படுத்தி எபிக் லங்கா பிரைவேட் நிறுவனம் தாக்கல் செய்த மனு நேற்று (03.12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது ஐந்து மில்லியன் இ-பாஸ்போர்ட்களை கொள்வனவு செய்வதற்கான டெண்டர் வழங்கப்பட்ட விதம் தொடர்பில் தேசிய கொள்வனவு குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திரு.சுமதி தர்மவர்தன நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விசாரணை தொடர்பான அவதானிப்புகளை சமர்ப்பிக்க குழு ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் அவர் மன்றில் கூறியதுடன், இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அறிவிப்பதற்கான திகதியை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகள் ஜனவரி 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.