இலங்கை
ஜூம் செயலி மூலம் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி!
ஜூம் செயலி மூலம் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்ற மருத்துவ ஆலோசனையை பின்பற்ற வேண்டிய அவசியம் காரணமாக, ஜூம் செயலி மூலம் கொழும்பு கோட்டை நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவரை ஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
உடல்நலக்குறைவு காரணமாக ரணில் விக்ரமசிங்கவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பின்னர் அவரை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு சிறைச்சாலை மருத்துவர்கள் தீர்மானித்ததையடுத்து, சிறைச்சாலை தலைமையகத்தின் அனுமதியுடன் ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் நீதிமன்றில் அழைக்கப்பட்ட நிலையில் ரணில் விக்ரமசிங்க ஜூம் செயலி மூலம் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
