இலங்கை
எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவை விமர்சிக்கும் தகுதி அரசுக்கு இல்லை; தயாசிறி ஜயசேகர தெரிவிப்பு!
எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவை விமர்சிக்கும் தகுதி அரசுக்கு இல்லை; தயாசிறி ஜயசேகர தெரிவிப்பு!
உள்ளூராட்சிச்சபைகளில் ஆட்சியமைப்பதற்காகப் பிள்ளையானின் கட்சியுடன் கூட்டணி அமைத்த தேசிய மக்கள் சக்திக்கு எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவை விமர்சிப்பதற்குத் தகுதியில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் கடந்த திங்கட்கிழமை நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
இது ரணில் விக்கிரமசிங்க என்ற தனிநபருக்கான போராட்டம் இல்லை. மாறாக ஜனநாயகம் ஒழிக்கப்பட்டு நாடு அராஜக நிலைக்குச் செல்வதை தடுப்பதற்கான போராட்டமாகும். சகல எதிர்க்கட்சிகளும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்கத்துக்குப்பெரிய வலியைக் கொடுத்திருக்கிறது. நாம் தற்போது ஒன்றிணைந்துள்ளமையை விமர்சிக்கும் தகுதி அரசாங்கத்துக்கு இல்லை. அரசாங்கத்தால் நாட்டின் ஜனநாயகம் தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தல் நிலைமையைச் சரிசெய்ய வேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும். அரசமைப்பு ஏகாதிபத்தியமயப்பட்டுள்ளதோடு, பொலிஸ் முற்றுமுழுதாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கல்களுக்காக நீதித்துறையில் தலையிட்டு அழுத்தம் பிரயோகிப்பதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான காரணிகளைத் தடுக்கும் வகையிலேயே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன – என்றார்.
