Connect with us

இலங்கை

மனிதப்புதைகுழிகள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்! மார்க் அன்ட்ரூ பிரான்சே

Published

on

Loading

மனிதப்புதைகுழிகள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்! மார்க் அன்ட்ரூ பிரான்சே

இலங்கையில் பல தசாப்தகாலமாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் வாழ்ந்துவருவதாகவும், அந்நிலை தொடர்வதன் ஊடாகக் கடந்தகாலக் காயங்களை ஆற்றமுடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்சே, மீறல்களின் தீவிரத்தன்மையை உணர்த்தும் மனிதப்புதைகுழிகள் தொடர்பில் நம்பத்தகுந்த சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு (30) காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் வெள்ளிக்கிழமை (29) கொழும்பில் அமைந்துள்ள அலரி மாளிகையில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisement

 அந்நிகழ்வில் கலந்துகொண்டு வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருடனான தமது உடன்நிற்பை வெளிப்படுத்தி உரையாற்றிய ஐ.நா வதிவிடப்பிரதிநிதி, இலங்கையைப் பொறுத்தமட்டில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமானது சுமை மிகுந்ததாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

 இலங்கையில் பல தசாப்தகாலமாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியாமல் வாழ்ந்துவருவதாகவும், அந்நிலை தொடர்வதன் ஊடாகக் கடந்தகாலக் காயங்களை ஆற்றமுடியாது எனவும் குறிப்பிட்ட அவர், இருப்பினும் அந்த உறவுகள் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நீதிகோரித் தொடர்ந்து போராடிவருவதாகத் தெரிவித்தார்.

 இவ்வாறானதொரு பின்னணியில் நீதி மற்றும் நல்லிணக்கம் என்பன உறுதிப்படுத்தப்படாமல் நாடு என்ற ரீதியில் நிலையான வளர்ச்சியோ அல்லது அபிவிருத்தியோ சாத்தியமில்லை எனவும் மார்க் அன்ட்ரூ பிரான்சே எடுத்துரைத்தார்.

Advertisement

 அதேபோன்று தற்போது யாழ். செம்மணியில் அடையாளங்காணப்பட்டுள்ள மனிதப்புதைகுழியில் சிறுவர்களது மனித எலும்புக்கூடுகள் உள்ளிட்ட மனித எச்சங்களும், பாடசாலைப்புத்தகப்பை உள்ளிட்ட பொருட்களும் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், இது மீறல்களின் தீவிரத்தன்மையை உணர்த்துவதாகவும் குறிப்பிட்ட அவர், அண்மையில் நாட்டுக்கு வருகைதந்திருந்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் செம்மணி மனிதப்புதைகுழியைச் சென்று பார்வையிட்டதை நினைவுகூர்ந்ததுடன் இம்மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் நம்பத்தகுந்த சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

 குறிப்பாக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு உண்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்தவேண்டியது அவசியம் எனத் தெரிவித்த ஐ.நா வதிவிடப்பிரதிநிதி, மனிதப்புதைகுழி அகழ்வு, கண்காணிப்பு, பகுப்பாய்வு மற்றும் விசாரணை என்பன உள்ளடங்கலாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயன்முறைகளில் பாதிக்கப்பட்ட தரப்பினர் உரியவாறு உள்வாங்கப்பட்டு, பங்காளிகளாக்கப்படவேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் பிரஸ்தாபித்தார்.

அத்தோடு ‘நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் குறித்த வழக்குகள் தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். 

Advertisement

வலிந்து காணாமலாக்கப்படல் விவகாரத்தைப் பொறுத்தமட்டில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி ஒத்துழைப்புடன் செயலாற்றுவதன் ஊடாகவே அவர்களது நம்பிக்கையைக் கட்டியெழுப்பமுடியும்’ என்றும் மார்க் அன்ட்ரூ பிரான்சே சுட்டிக்காட்டினார்.

மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் இவ்விவகாரம் தொடர்பில் இயங்கிவரும் செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படுதல் மற்றும் அவர்களுக்கு எதிராக வன்முறைகள் பிரயோகிக்கப்படல் என்பன குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்திய அவர், நீதியை நாடுவது என்பது ஒருபோதும் குற்றமாக இருக்கமுடியாது என்றார்.

 ‘குற்றங்களில் ஈடுபட்டவர்கள் முறையான விசாரணைகள் ஊடாகப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும்.

Advertisement

அதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் தயாராக இருக்கிறது. 

அதற்கமைய கடந்தகால மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமை என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும்’ எனவும் ஐ.நா வதிவிடப்பிரதிநிதி வலியுறுத்தினார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன