பொழுதுபோக்கு
ஒரே படத்தில் அக்கா, தங்கை; இருவருடனும் டூயட் பாடிய கேப்டன் விஜயகாந்த்: இந்த சகோதரிகள் ரொம்ப ஃபேமஸ்!
ஒரே படத்தில் அக்கா, தங்கை; இருவருடனும் டூயட் பாடிய கேப்டன் விஜயகாந்த்: இந்த சகோதரிகள் ரொம்ப ஃபேமஸ்!
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும், தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள கேப்டன் விஜயகாந்த், சினிமாவில் பட நடிகைகளுடன் இணைந்து நடித்திருந்தாலும் ஒரே படத்தில் அக்கா தங்கை என இருவருடனும் நடனமாடி அசத்தியுள்ளார். அந்த நடிகைகள் யார் தெரியுமா?தமிழ் சினிமாவில், அம்பிகா, ராதா, ஊர்வசி, கல்பனா, கலாரஞ்சனி, ராதிகா, நிரோஷா என சகோதரிகள் ஒருசிலர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே சினிமாவில் பிரபலமான சகோதரிகள். ஆனால் இந்த வரிசையில் சரியான பிரபலம் ஆகாத சகோதரி இருக்கிறார்கள். அவர்கள் தான் பானுப்பிரியா அவரது தங்கை சாந்திப்பிரியா. ஆந்திராவை சேர்ந்த பானுப்பிரியா, தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.அதே சமயம், தமிழில் ஒருசில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அனைத்து படங்களையும் ஹிட் படமாக கொடுத்தவர் தான் சாந்தி பிரியா. 1983-ம் ஆண்டு வெளியான மெல்ல பேசுங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக பானுப்பிரியா, விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ், கார்த்திக், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். இதில், 1990-ம் ஆண்டு வெளியான சிறையில் பூத்த சின்ன மலர் தொடங்கி, 5 படங்களில் கேப்டன் விஜயகாந்துடன் இணைந்து நடித்துள்ளார்.அதேபோல் நடிகை சாந்திப்பிரியா, 1987-ம் ஆண்டு வெளியான ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில், அறிமுகமாகி, ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இதில் தனது அக்கா பானுப்பிரியாவுடன் சிறையில் பூத்த சின்ன மலர் படத்தில், சாந்திப்பிரியா நடித்திருப்பார். இதில் அக்கா பானுப்பிரியாவை விஜயகாந்த் காதலிக்க, அவரை சாந்திப்பிரியா காதலிப்பார். கடந்த 1990-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை அமிர்தம் என்பவர் இயக்கியிருந்தார்.எஸ்.எஸ்.சந்திரன், ஜெயபாரதி, தியாகு, சார்ளி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் வில்லனாக மறைந்த நடிகர் ராஜேஷ் நடித்திருப்பார். இளையராஜா இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்து. 1982-ம் ஆண்டு, சந்திரசேகர் மேனகா நடிப்பில் வெளியான தூக்குமேடை படத்திற்கு பிறகு, அமிர்தம் இந்த படத்தின் மூலம் மீண்டும் இயக்குனராக ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த படத்திற்கு வாலி, பிறைசூடன், கங்கைஅமரன், புலமைப்பித்தன் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.இதில் கே.எஸ்.சித்ரா பாடிய வச்சான் வச்சான் என்ற பாடலுக்கு சாந்திப்பிரியா சிறப்பாக நடனம் ஆடியிருப்பார். இதன் மூலம் ஒரே படத்தில் அக்கா தங்கை என இருவருடனும் கேப்டன் விஜயகாந்த் நடனம் ஆடியுள்ளார். எங்கேயே கேட்ட குரல் படத்தில் ரஜினிகாந்த், காதல் பரிசு படத்தில் கமல்ஹாசன் ஆகியோர் ஒரே படத்தில் அம்பிகா, ராதா என சகோதரிகளுடன் நடித்திருப்பார்கள். அந்த வரிசையில் விஜயகாந்தும் இடம் பிடித்துள்ளார். சிறையில் பூத்த சின்ன மலர் படமும் கேப்டனுக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.கடைசியாக 1992-ம் ஆண்டு உயர்ந்தவன் என்ற படத்தில் நடித்திருந்த சாந்திப்பிரியா 33 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் தயாரிப்பில், வர்ஷா பரத் இயக்கியுள்ள பேட் கேர்ள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
