தொழில்நுட்பம்
மருத்துவ உலகில் புரட்சி: இதய நோய்களை முன்கூட்டியே கண்டறியும் ஏ.ஐ. ஸ்டெதஸ்கோப்!
மருத்துவ உலகில் புரட்சி: இதய நோய்களை முன்கூட்டியே கண்டறியும் ஏ.ஐ. ஸ்டெதஸ்கோப்!
இதயம்… நம் உடலின் மிக முக்கியமான உறுப்பு. அதன் துடிப்பை உணர்ந்து, அதன் ஒலிகளைப் புரிந்துகொள்வது மருத்துவத்தின் முதல் படி. பல 100 ஆண்டுகளாக, இந்த வேலையைச் செய்வதற்கான ஒரே கருவி, நம் மருத்துவர்களின் கழுத்தில் தொங்கும் ஸ்டெதஸ்கோப்தான். 1816-ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கருவி, 2 நூற்றாண்டுகளுக்கும் மேலாக எந்தப் பெரிய மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், இப்போது எல்லாம் மாறிவிட்டது.செயற்கை நுண்ணறிவு (AI) எனும் புரட்சி, இந்தக் கருவியின் அமைதியைக் கலைத்துள்ளது. சாதாரண ஸ்டெதஸ்கோப், சூப்பர் ஸ்டெதஸ்கோப்-ஆக உருமாறியுள்ளது. பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள புதிய AI-இயக்கப்பட்ட ஸ்டெதஸ்கோப், வெறும் 15 வினாடிகளில் மூன்று முக்கியமான இதய நோய்களைக் கண்டறியும் ஆற்றலைக் கொண்டுள்ளது.ஏ.ஐ. ஸ்டெதஸ்கோப்: எப்படி இது சாத்தியம்?இந்த ஸ்டெதஸ்கோப்பை அமெரிக்க நிறுவனமான Eko Health உருவாக்கியுள்ளது. இது பழைய முறையின் ஒலிப்பதிவுக்கும், நவீன கணினி ஆற்றலுக்கும் இடையே பாலமாகச் செயல்படுகிறது. வழக்கமான ஸ்டெதஸ்கோப்பைப் போலல்லாமல், மனித காதுகளுக்குக் கேட்க முடியாத மிகச் சிறிய இதயத்துடிப்பு மாற்றங்களையும், ரத்த ஓட்ட ஒலிகளையும் மைக்ரோஃபோன் மூலம் பதிவு செய்கிறது. அதே நேரத்தில், இதயத்தின் மின்சக்தி அலைகளை அளந்து, ஒரு விரைவான எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG) பதிவையும் எடுக்கிறது.சேகரிக்கப்பட்ட இந்தத் தகவல்கள் பாதுகாப்பாக மேகக்கணினிக்கு (Cloud) அனுப்பப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான நோயாளிகளின் தரவுகளைப் பயன்படுத்திப் பயிற்சி அளிக்கப்பட்ட அல்காரிதம்கள், முடிவுகளைச் சில நொடிகளில் பகுப்பாய்வு செய்கின்றன. அதன் பிறகு, நோயாளிக்கு இதய செயலிழப்பு, பக்கவாதம் ஏற்படுத்தும் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு (ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன்) அல்லது இதய வால்வு நோய் இருக்கிறதா என்பதை உடனடியாகத் தெரிவிக்கிறது. இந்த முடிவுகள், மருத்துவர்களின் ஸ்மார்ட்போனுக்கு நேரடியாக அனுப்பப்பட்டு, அவர்கள் உடனடியாகச் சிகிச்சை அளிக்க உதவுகிறது.TRICORDER என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய ஆய்வில், லண்டனில் உள்ள சுமார் 200 பொது மருத்துவ மையங்கள் பங்கேற்றன. மூச்சுத்திணறல், சோர்வு போன்ற அறிகுறிகள் கொண்ட 12,700-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இந்த புதிய கருவியால் பரிசோதிக்கப்பட்டனர். ஆய்வு முடிவுகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தின.ஏ.ஐ. ஸ்டெதஸ்கோப்பால் பரிசோதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, மற்றவர்களை விட, இதய செயலிழப்பு 2.3 மடங்கு அதிகமாகவும், பக்கவாதம் ஏற்படுத்தும் இதயத்துடிப்பு 3.5 மடங்கு அதிகமாகவும், இதய வால்வு நோய் 2 மடங்கு அதிகமாகவும் கண்டறியப்பட்டது. இதய நோய்களை முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவத்தை இந்த முடிவுகள் தெளிவாக உணர்த்தின.மருத்துவர்கள் சொல்வது போல, பல சமயங்களில் இதய நோய்கள் அவசர சிகிச்சை நிலையில் மட்டுமே கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால், இந்த ஆய்வின்படி, பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆரம்பத்திலேயே அறிகுறிகள் இருந்தும், அவை கண்டறியப்படவில்லை. இந்த AI ஸ்டெதஸ்கோப், அந்த இடைவெளியைக் குறைத்து, நோயாளிகள் சரியான நேரத்தில் சிகிச்சையைப் பெற உதவுகிறது.இந்தத் தொழில்நுட்பம் மிகவும் சிறப்பாக இருந்தாலும், இதனை மருத்துவர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வதற்குச் சில தடைகள் உள்ளன. ஆய்வில் பங்கேற்ற 70% மருத்துவ மையங்கள் ஒரு வருடத்திற்குப் பிறகு இந்த ஸ்டெதஸ்கோப்பைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டன அல்லது குறைவாகப் பயன்படுத்தின. இதற்கு முக்கிய காரணம், இதனைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி மற்றும் அன்றாட மருத்துவ நடைமுறைகளில் இதனை இணைப்பதற்கான சிரமங்கள்.மேலும், இந்தச் சாதனத்தால் கண்டறியப்பட்ட நோயாளிகளில், 3-ல் 2 பேருக்கு உண்மையில் அந்த நோய் இல்லை என்பது தெரிய வந்தது. இது தேவையற்ற பதற்றத்தையும், அதிகப்படியான பரிசோதனைகளையும் ஏற்படுத்தலாம். ஆனாலும், கண்டறியப்படாமல் போகும் நோய்களை விட, இந்தச் சிறிய சிரமம் பரவாயில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.எதிர்காலத்தில், இந்த AI ஸ்டெதஸ்கோப், ஒவ்வொரு மருத்துவ மையத்திலும் ஒரு முக்கிய கருவியாக மாறலாம். இது மருத்துவர்களின் பணியை எளிதாக்குவதுடன், பல உயிர்களையும் காப்பாற்றலாம். ஏ.ஐ. மற்றும் மருத்துவத்தின் இந்த இணைப்பு, ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி உள்ளது.
