இந்தியா
இரட்டை இலை வழக்கு: ஓபிஎஸ் கருத்தை கேட்க உயர் நீதிமன்றம் உத்தரவு.. வழக்கு விவரம் இதோ!

இரட்டை இலை வழக்கு: ஓபிஎஸ் கருத்தை கேட்க உயர் நீதிமன்றம் உத்தரவு.. வழக்கு விவரம் இதோ!
ஈபிஎஸ், ஓபிஎஸ்
திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்ய மூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அதிமுகவின் உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சியின் சட்டதிட்டங்கள் தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்தில் 2017 முதல் 2022 வரை பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
மேலும், அதிமுக தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடியும்வரை இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்ததாகவும், ஆனால், மனு மீது எந்த பதிலும் இதுவரை தேர்தல் ஆணையம் தரவில்லை. எனவே, தனது மனு மீது விசாரணை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சூர்ய மூர்த்தி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவானது நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம், குமரப்பன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “சூர்ய மூர்த்தியின் மனு தொடர்பாக அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு பதில் கிடைக்கப்பெற்றது. இது சம்பந்தமாக விரைவில் முடிவெடுக்கப்படும்” என்று விளக்கமளித்தனர்.
அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், “இந்த விவகாரத்தில் தங்களது தரப்புக்கு நோட்டீஸ் எதுவும் அனுப்பப்படவில்லை. தங்களது தரப்பையும் கேட்ட பின்னரே இந்த மனு மீது முடிவெடுக்க உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, நான்கு வாரங்களில் சூர்ய மூர்த்தி தாக்கல் செய்த மனு மீது முடிவெடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஓபிஎஸ் உட்பட அனைத்து தரப்பு கருத்தினையும் கேட்டபின்பே முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறினர்.