இந்தியா
வெள்ள நிவாரண முகாம்களில் சுமார் 26,600 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் – தமிழக அரசு

வெள்ள நிவாரண முகாம்களில் சுமார் 26,600 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் – தமிழக அரசு
ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழை பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக சேதமடைந்துள்ளது. கனமழை மற்றும் சாத்தனூர் அணை திறப்பு உள்ளிட்டவற்றால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக, கடலூர்-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வெள்ளம் முழுமையாக வடிந்த நிலையில், 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு தற்போது வழக்கம் போல வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்தூரில் வீடுகளுக்குள் சேறு கலந்த மழைநீர் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் வடியாத நிலையில், உணவு, உடையின்றி தவித்து வருவதாக திருவாமாத்தூர் பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பல மாவட்டங்களில் வெள்ள நீர் முழுமையாக வடியாத காரணத்தினால் வெள்ள நிவாரண முகாம்களில் 26,600 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. விழுப்புரத்தில் 4906 பேர், கடலூரில் 19654 பேர், கள்ளக்குறிச்சியில் 1980 பேர் பாதுகாப்பு முாகம்களில் தங்கவைக்கப்பட்டதாக அரசு கூறியுள்ளது.
Also Read :
தமிழகத்தில் 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை… வானிலை மையம் அலர்ட்..!
நிவாரண முகாம்களில் தங்கி இருந்த பொதுமக்கள் அனைவருக்கும் உணவு பொட்டலங்கள், பால், பிஸ்கட்டுகள், அரிசி, பருப்பு, பாய், ரெட்டி உள்ளிட்ட அத்தியாவச பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் 860 வீடுகள், கள்ளக்குறிச்சியில் 461 கூரை வீடுகள் 113 சீட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் 19 பசுமாடுகள், 76 கன்றுக்குட்டிகள் மற்றும் 52 ஆடுகள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது