இந்தியா
போராட்டங்களின் ‘பணப் பரிவர்த்தனை’யை ஆய்வு செய்ய அமித் ஷா உத்தரவு: இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையா?
போராட்டங்களின் ‘பணப் பரிவர்த்தனை’யை ஆய்வு செய்ய அமித் ஷா உத்தரவு: இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையா?
டெல்லி: மக்களின் கோப அலைகள், திடீர் போராட்டங்களாக வெடிக்கும்போது, அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? நிதி ஆதாரங்கள் எங்கிருந்து வருகின்றன? இந்த கேள்விகளுக்கு விடை காண, மத்திய அரசு ஒரு புதிய வியூகத்தை வகுத்து வருகிறது. உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் “சதித்திட்டங்களால் தூண்டப்படும்” போராட்டங்களை எதிர்காலத்தில் தடுப்பதற்காக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒரு விரிவான ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளார்.இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த முக்கிய போராட்டங்கள், குறிப்பாக 1974-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த அனைத்துப் பெரிய மக்கள் போராட்டங்களையும் ஆழமாக ஆய்வு செய்ய, காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகத்திற்கு (BPR&D) அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆய்வு, போராட்டங்களுக்கான காரணங்கள், அதன் பின்னணியில் இயங்கும் சக்திகள், நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் அதன் இறுதி விளைவுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடத்தப்படும்.ரகசிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகடந்த ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில், டெல்லியில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு-2025-ல், உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த முக்கிய முடிவை அறிவித்தார். அப்போது அவர், “வெறுமனே ஒரு கூட்டம் அல்லது போராட்டமாகத் தோன்றும் நிகழ்வுகளின் பின்னால், சில சுயநலக் குழுக்கள் அல்லது ‘வெஸ்டட் இன்ட்ரெஸ்ட்ஸ்’ செயல்படுகின்றன” என்று குறிப்பிட்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த குழுக்களின் நோக்கங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவற்றை முறியடிக்க ஒரு நிலையான வழிமுறையை (Standard Operating Procedure – SOP) உருவாக்க வேண்டும் என்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கம்.நிதிப் பரிவர்த்தனைகள் மீது தீவிர கவனம்இந்த புதிய திட்டத்தின் கீழ், போராட்டங்களின் நிதி அம்சங்கள் மிக நுட்பமாக ஆராயப்பட உள்ளன. இதற்காக, அமலாக்கத்துறை (ED), நிதிப் புலனாய்வுப் பிரிவு (FIU-IND) மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) போன்ற நிதிப் புலனாய்வு அமைப்புகளும் இந்த ஆய்வில் இணைக்கப்பட உள்ளன. போராட்டக்காரர்களுக்கு நிதி எப்படி வந்து சேருகிறது, வெளிநாட்டு நிதி இதில் சம்பந்தப்பட்டதா போன்ற கேள்விகளுக்கு விடை காண இந்த அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படும்.இது மட்டுமல்லாமல், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்கும் வகையிலும், நிதிப் பரிவர்த்தனைகள் வழியாக மறைந்திருக்கும் பயங்கரவாத வலைப்பின்னல்களை கண்டறியவும் ஒரு சிறப்பு நிலையான வழிமுறையை (SOP) உருவாக்க இந்த அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பஞ்சாப் விவகாரங்கள்: புதிய அணுகுமுறைபஞ்சாப் மாநிலத்தில் அதிகரித்துவரும் காலிஸ்தான் தீவிரவாதம் மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த, தேசிய புலனாய்வு முகமை (NIA), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) மற்றும் நார்ஃபோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ (NCB) போன்ற அமைப்புகளுக்கு புதிய வழிமுறைகளை உருவாக்க அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். இதில், சிறைகளில் இருந்தபடியே குற்றச் செயல்களை இயக்கும் கும்பல் தலைவர்களை, நாட்டின் வேறு மாநில சிறைகளுக்கு மாற்றி, அவர்களின் தொடர்புகளை துண்டிக்க வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.மத கூட்டங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் ஏற்படும் நெரிசல்களை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கவும், காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகத்திற்கு (BPR&D) அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த விரிவான ஆய்வுகள், வருங்கால இந்தியாவில் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
