விளையாட்டு
IPL Auction 2025 : 19 வயது ஆப்கன் வீரரை ரூ. 10 கோடிக்கு வாங்கிய சி.எஸ்.கே… யார் இந்த நூர் அகமது?

IPL Auction 2025 : 19 வயது ஆப்கன் வீரரை ரூ. 10 கோடிக்கு வாங்கிய சி.எஸ்.கே… யார் இந்த நூர் அகமது?
நூர் அகமது
ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அகமதுவை (Noor Ahmad CSK) ரூ. 10 கோடி கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் மெகா ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளது. இரவு 9 மணி நிலவரப்படி இந்த ஏலத்தில் சென்னை அணி அதிக விலை கொடுத்து வாங்கிய வீரராக நூர் அகமது இருந்து வருகிறார்.
2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 10 ஐபிஎல் அணிகள் பங்கேற்றுள்ளன. ஷ்ரேயாஸ் ஐயர் ரூ. 26.75 கோடிக்கு பஞ்சாப் அணியாலும், ரிஷப் பந்த் ரூ. 27 கோடிக்கு லக்னோ அணியாலும் விலைக்கு வாங்கப்பட்டனர். இதேபோன்று ஏலத்தில் கலக்கிய சென்னை அணி நிர்வாகிகள் அஷ்வினை சாதுர்யமாக செயல்பட்டு விலைக்கு வாங்கினர்.
2022 ஏலத்தின்போது ராஜஸ்தான் அணிக்கு சென்ற ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு அடிப்படை விலையாக ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவரை வாங்குவதில் கடும் போட்டி காணப்பட்ட நிலையில் ரூ. 9.75 கோடிக்கு சென்னை அணி விலைக்கு வாங்கியது. இதன்படி 10 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை அணியில் மீண்டும் இணைகிறார் அஷ்வின்.
இதேபோன்று சூப்பர் ஃபார்மில் இருக்கும் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவிந்திராவை ரூ. 4 கோடி கொடுத்து சென்னை அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது. ஏற்கனவே சென்னை அணியில் இருந்த முக்கிய ஆட்டக்காரரான டெவோன் கான்வே ரூ. 6.25 கோடிக்கு சென்னை அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
குறிப்பிடும் வகையில் 26 வயதான வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவை சென்னை அணி ரூ. 4.80 கோடி கொடுத்து அணியில் எடுத்துள்ளது. நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய கலீல் 14 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஏலத்தின் போது அதிரடி திருப்பமாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமதுவை எடுப்பதற்கு அணிகள் ஆர்வம் காட்டின. மும்பை அணி ரூ. 5 கோடி வரை அவருக்கு அறிவித்தது. நூர் அகமதை ஆர்டிஎம் முறையில் தக்க வைத்துக் கொள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி விரும்பவில்லை. அப்போது, சென்னை அணி ரூ. 10 கோடி அறிவித்து நூர் அகமதுவை விலைக்கு வாங்கியது.
இதைத் தொடர்ந்து யார் இந்த நூர் அகமது என சென்னை அணியின் ரசிகர்கள் இணையத்தில் தேடத் தொடங்கியுள்ளனர். 2022 ஆம் ஆண்டு இவரை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 30 லட்சத்திற்கு வாங்கியது. 19 வயதாகும் இவர், 2023 சீசனில் 13 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளையும், நடைபெற்று முடிந்த சீசனில் 10 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
இவரது எகானமி ரேட் அணிக்கு பலம் சேர்ப்பதாலும், சென்னை அணிக்கு ஸ்பின்னர் தேவை என்பதாலும் அவரை ரூ. 10 கோடி கொடுத்து சிஎஸ்கே வாங்கியுள்ளது.