இலங்கை
அர்ச்சுனாவின் பதவியை விரைவில் பறிக்க முடிவு!

அர்ச்சுனாவின் பதவியை விரைவில் பறிக்க முடிவு!
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் எனவும் அவரது கருத்து தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படும் எனவும் சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களை நேற்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது வாகனம் மற்றும் இல்லங்களை எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரவில்லை. எவ்வாறாயினும், தூரப் பகுதிகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில சமயங்களில் பல நாட்கள் கொழும்பில் தங்கியிருக்க வேண்டிய ஏற்படலாம் எனவே, தூரத்தின் அடிப்படையில் குறித்த வசதிகளை வழங்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
எனவே, தகுதியானவர்கள் இனங்காணப்பட்டுக் குறித்த வசதிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனச் சபாநாயகர் குறிப்பிட்ட அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராகச் சபாநாயகரினால் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா எனச் சபாநாயகரிடம் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த சபாநாயகர், நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சம்பவம் இடம்பெற்றபோது சபாநாயகர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, அது குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முடியாது. அதற்கமைய, குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், அவர் கூறிய ஈழம் தொடர்பான கருத்து சத்தியப்பிரமாணத்துடன் முரண்படுவதாக உள்ளது. எவ்வாறாயினும், சத்தியப் பிரமாணம் செய்வதற்கு முன்னரே தாம் ஈழம் தொடர்பான கருத்துகளை முன்வைத்ததாக இராமநாதன் அர்ச்சுனா கூறுகிறார். அவரது நோக்கம் என்னவென்பது தெரியவில்லை.
எனவே, அவரது சமூக ஊடக கணக்குகள் ஆராயப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் – என்றார். (ப)